குன்னூர் மவுண்ட்ரோட்டில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் நெரிசல்

குன்னூர் : குன்னூர் மவுண்ட்ரோட்டில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதோடு, ஆம்புலன்ஸ்கள் செல்ல வழியில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட்ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

குறிப்பாக பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், அலுவலகங்கள் செல்ல இந்த சாலை சுலபமாக உள்ளதாலும், மார்க்கெட் பகுதியை ஒட்டி இருப்பதாலும் எந்த நேரமும் பரபரப்பாக இருந்து வருகிறது. இதனிடையே சாலையின் இருபுறங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும், இவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் சாலையோரங்களில் கடை வைத்திருக்கும் கடை வியாபாரிகளும் பெரிதளவில் பாதிப்புகளை சந்தித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனிடையே நேற்று அவசர ஒலியுடன் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நீண்ட நேரமாக செல்ல முடியாமல் தவித்தது.

மதிய நேர உணவு இடைவெளி நேரத்தில், போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

மேலும், பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவலர்கள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, கோடை சீசனில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் மவுண்ட்ரோட்டில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: