இம்முகாமிற்கு நெல்லையில் காரியாண்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட 26 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்டது.
இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் இருந்து தலா 15 மாணவர்கள், 15 மாணவிகள் என மொத்தம் 780 பேர்கள் இயற்கை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு துணையாக தலா ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆசிரியர் என 52 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அங்கு அவர்களுக்கு வன உயிரினங்கள், காடுகள், வனங்களால் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
மேலும் வனத்துறையினர் பாதுகாப்புடன் பொதுமக்கள் செல்ல முடியாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு களப்பயணம் அழைத்து சென்று நேரிடையாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக காரியாண்டி மற்றும் கரந்தாநேரி அரசு உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களுடன் தலைமையாசிரியர் விஜயராஜன், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அபிநய சுந்தரம், ஆசிரியர்கள் சுந்தரக்குமார், ஜேக்கப் ராஜ் உள்ளிட்டோரும் சென்றனர். அவர்களை வனச்சரகர் கல்யாணி வரவேற்று வனத்துறை விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேட்ஜ் வழங்கினார்.பின்னர் களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து சுற்றுச்சூழல், கால நிலை மாற்றத்தில் வனங்களின் முக்கிய பங்கு குறித்து படக்காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இயற்கை முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
முகாமின் போது அனைவருக்கும் வனத்துறையின் சார்பில் காலை, மதிய உணவும் அளிக்கப்பட்டது. இந்த இயற்கை முகாமினால் பொதுமக்கள் செல்ல முடியாத பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை அரசு பள்ளி மாணவர்கள் காண்பதற்கான வாய்ப்பினை தமிழ்நாடு வனத்துறை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
The post நெல்லை காரியாண்டி பள்ளி உள்பட 26 அரசு பள்ளிகளின் மாணவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு களப்பயணம் appeared first on Dinakaran.