புதுச்சேரி, ஏப். 9: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. புதுச்சேரியில் கடந்த மாதம் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன், மன்னார்குடி தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த இளமுருகன் ஆகிய 3 பேரை காரைக்காலில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும் பொறியாளர்கள் வீட்டில் இருந்து ரூ.73 லட்சம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமைப் பொறியாளர் கைதாகியுள்ள நிலையில் அவரது டைரி, கைபேசிகளை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 3 பேரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி கடந்த வாரம் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அதனை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட 3 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனிடையே இவ்வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரியில் அவ்வப்போது ரகசிய முகாமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post லஞ்ச வழக்கில் சிபிஐ கைது செய்த புதுச்சேரி தலைமை பொறியாளர் உட்பட 3 பேருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.