சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே, கோயில் திருவிழாவில் பல்வேறு சுவாமிகள் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, குரும்பலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செகுடப்பர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் விழாவில் செகுடப்பர் அய்யனார் மற்றும் கருப்பசாமிக்கு பெண்கள் மாவிளக்கு வைத்தும், கரும்பு தொட்டில் எடுத்தும் வழிபட்டனர். நேற்று மாலை பிரசித்திபெற்ற புலிகுத்தும் வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் குரும்பலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பலர் சிவபெருமான், அம்மன், முருகன், எமதர்மர் உள்ளிட்ட சுவாமிகளின் வேடமணிந்தும், போலீஸ், மூதாட்டி போன்ற வேடமணிந்தும் கலந்துகொண்டனர். புலிகுத்தும் வேட்டையை முன்னிட்டு, கிராம கண்மாயில் பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்டனர். பின்னர், நடனமாடி மகிழ்ந்தனர். புலி ஆட்டமும் நடைபெற்றது. மேலும் பலர் தங்களது உடலில் வைக்கோல் பிரி சுற்றி வந்தனர். புலி ஆட்டத்துடன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் கோயிலில் அனைவரும் வழிபட்டனர்.
The post சிங்கம்புணரி அருகே கோயில் திருவிழாவில் பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் appeared first on Dinakaran.