மதுரை: மதுரை அருகே, கொங்கர் புளியங்குளம் மலையில் புடைப்புச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்வெட்டில், ‘சமணப் படுக்கை செய்தவருக்கு கலசம் நிறைய பொன் கொடுத்த தகவல் குறிக்கப்பட்டுள்ளது. மதுரை கொங்கர் புளியங்குளம் அருகே இருக்கும் மலையில் 30க்கும் அதிகமான கற்படுக்கைகள் உள்ளன. இவற்றில் கிமு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த 3 வணிக கல்வெட்டுகள் உள்ளன. இதில், கற்படுக்கை செய்து கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொன்னின் அளவு குறித்த தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மலையின் இடதுபுறம் ஒரு மகாவீரர் சிலையும் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது கிபி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இந்நிலையில் மதுரையை சேர்ந்த தமிழ் மெய்யியல் ஆய்வாளர் ஆசிரியர் ஹாருன் பாஷா, ஆசிரியர் விவேக் மற்றும் மாணவர் நிதிஷ்குமார் ஆகியோர் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘இந்த மலைப்பகுதியில் கிபி 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலைக்கு கீழே இடதுபுறம் ஒரு சிறு குகை போன்ற அமைப்பின் உள்ளே ஒரு குடையுடன் 2 பெண் சீடர்கள் சாமரம் வீச 20 செமீ உயரத்தில் ஒரு தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அதன் அருகில் இரு பெரிய மற்றும் சிறிய வணிகர்களின் புடைப்புச் சிற்பமும் காணப்படுகிறது.
முதலாமவர் அவர்களை வணங்குவதாகவும், மற்றொருவர் கையில் ஒரு கலசம் (மண்பானை) இருப்பது போலவும் அது வடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கலசம் அங்கு படுக்கை செய்ய கொடுக்கப்பட்ட பொன்னின் அளவைக் குறிக்கிறது. இதுகுறித்து இம்மலை மீதுள்ள ஒரு கல்வெட்டில் தகவல் இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது இதனை உறுதி செய்கிறது. பொன் அளிக்கும் வணிக சிற்பங்கள் தீர்த்தங்கரர் அருகில் இருப்பது இதுவே முதல் முறை. அந்த இடத்தை சுற்றி பல்வேறு தொல்லியல் தடயங்கள் விரவிக் கிடக்கின்றன. இவற்றை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.
The post மதுரை அருகே புடைப்புச் சிற்பம் கண்டுபிடிப்பு; சமணப் படுக்கை செய்தவருக்கு கலசம் நிறைய பொன் வழங்கல்: கல்வெட்டில் தகவல் appeared first on Dinakaran.