திருவாலங்காட்டில் இன்று வடாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திருத்தணி: திருவாலங்காட்டில் பிரசித்தி பெற்ற வடாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிவப்பெருமான் நடனமாடிய ஐம்பெரும் சபைகளில் முதல் சபையான ரத்தினசபை எனும் சிறப்புடன் பிரசித்தி பெற்ற திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் நூற்றாண்டு கால கோயிலாகும். திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு பங்குனி உத்திரப் பெருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் இந்தாண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவர் சோமாஸ்கந்தர் பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான கமல தேரோட்டம் இன்று காலை நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் வண்டார்குழலி சமேதராக உற்சவர் சோமாஸ்கந்தர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் திருத்தணி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சிவன்-பார்வதி வேடமிட்டு பக்தி பரசவத்துடன் நடனமாடி, நமச்சிவாய கோஷங்களுடன் சாமி தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் தேரின்மீது உப்பு, மிளகு தூவி வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள், உபயதாரர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

The post திருவாலங்காட்டில் இன்று வடாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: