கடலூர், ஏப். 5: கடலூரில் லாரி டிரைவர்களை கத்தியால் வெட்டி பணம் மற்றும் செல்போன்கள் பறித்த வழக்கில் கொள்ளை கும்பல் தலைவன் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி ஆய்வு செய்தார். விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி டிரைவர்களை கத்தியால் தாக்கி 6 பேர் கொண்ட கும்பல் பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றது. இதேபோல பெரியப்பட்டு அருகே ஒரு லாரி டிரைவரிடம் பணம் பறிக்க முயற்சியும் நடந்துள்ளது.
இதையடுத்து கடலூர் எம்.புதூர் பகுதியில் நடந்து சென்ற விவசாயியிடமும் அந்த கும்பல் தாக்கி செல்போனை பறித்து சென்றது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டதன்பேரில் கடலூர் டிஎஸ்பி ரூபன்குமார் மேற்பார்வையில் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இந்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் கொள்ளை கும்பல் தலைவன் புதுச்சேரியை சேர்ந்த விஜய் (19) என்பவர் கடலூர் எம்.புதூர் காசநோய் மருத்துவமனை அருகே உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை பிடிக்க முயன்றபோது அங்கு மறைந்திருந்த விஜய் திடீரென பாய்ந்து வந்து கத்தியால் இரண்டு காவலர்களை வெட்டியுள்ளார். மேலும் ஆய்வாளர் சந்திரனை தாக்க முயன்றபோது தற்காப்புக்காக அவர் சுட்டதில் விஜய் உயிரிழந்தார். இதன் பின்னர் போலீசார் தீவிர தேர்தல் வேட்டை நடத்தி கொள்ளை கும்பல் தலைவனின் கூட்டாளிகளான ரேவந்த் குமார் (21), அன்பரசு (20), ரியாஸ் அகமது (22), ஆகாஷ் மற்றும் 17 வயது சிறுவனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொள்ளை கும்பல் தலைவன் விஜய் என்கவுன்டர் செய்யப்பட்ட எம்.புதூர் பகுதிக்கு நேற்று கடலூர் குற்றவியல் நடுவர் நீதிபதி பிரவீன் குமார் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விஜய் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு போலீசாரிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பார்வையிட்டார்.
அப்போது தடயவியல் நிபுணர்களும் அந்த மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்தனர். மேலும் விஜய் என்கவுன்டர் செய்யப்பட்ட பிறகு அவரை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போலீஸ் ஜீப்பையும் நீதிபதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது டிஎஸ்பிக்கள் லாமேக், ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
The post கடலூர் எம்.புதூர் காசநோய் மருத்துவமனை அருகே கொள்ளை கும்பல் தலைவன் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் நீதிபதி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.