காலாப்பட்டு, ஏப். 5: புதுச்சேரி சின்னகாலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அதேபோல் அங்கு பேராசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்துக்கு உள்ளேயே மாணவ- மாணவிகள் விடுதி, பேராசிரியர்கள் குடியிருப்பு ஆகியவை உள்ளன.
அதில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் தமிழ்ச்செல்வன் என்ற இளைஞர், பல்கலைக்கழக மாணவர் விடுதியில் புகுந்து மாணவர்கள் பயன்படுத்தி வந்த லேப்டாப்களை திருடிச் சென்றார்.
இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தமிழ்ச்செல்வனை சென்னையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். டி-22 என்ற பேராசிரியர் குடியிருப்பில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சித்தார்த் புஷி என்ற பேராசிரியர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவரது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு, வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. இதனை கண்ட அருகில் வசிக்கும் பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், காலாப்பட்டு போலீசுக்கும் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் தனசேகர், எஸ்ஐ குமார் தலைமையிலான போலீசார் திருட்டு சம்பவம் நடந்த பேராசிரியரின் வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருட்டு சம்பவம் குறித்து, சுற்றுலா சென்றுள்ள சித்தார்த் புஷிக்கு, காலாப்பட்டு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவரது நண்பரும், உதவி பேராசிரியருமான யோகேஷ் முன்னிலையில் பேராசிரியர் வீட்டில் சோதனை செய்து பார்த்ததில், பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
அவற்றின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும். சுற்றுலா சென்றுள்ள பேராசிரியர் சித்தார்த் புஷி ஊர் திரும்பிய பிறகே திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு விவரம் தெரியவரும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகமூடி அணிந்த ஒருவர் திருட்டு நடந்த வீட்டில் இருந்து வருவது தெரியவந்தது. அதன் அடிப்படையில் 2 தனிப்படை அமைத்து, திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடப்பதால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
The post பல்கலை. வளாகத்தில் தொடரும் சம்பவங்களால் அச்சம்: பேராசிரியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.