உளுந்தூர்பேட்டை, ஏப். 5: உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க்கில் தகராறு செய்து ஊழியர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஐடிஐ எதிரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் எழில்பாபு. இவருடைய பெட்ரோல் பங்க்கில் பாலி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்(30) என்பவர் பெட்ரோல் போடும் வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை மணிகண்டன் பணியில் இருந்த போது அங்கு வந்த கடலூர் மாவட்டம் அன்னக்காரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் சட்டக் கல்லூரி மாணவரான சிவபாலன் (23) மற்றும் இதே கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் சீத்தாராமன் மகன் விக்னேஷ் (23), கலைச்செல்வன் (20) ஆகிய மூன்று பேரும் ஒரே பைக்கில் குடிபோதையில் ரூ.200க்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அதற்கான பணத்தை செல்போன் ஜிபே மூலம் அனுப்பி உள்ளனர்.
ஆனால் பணம் கணக்கில் ஏறாததால் இதுகுறித்து ஊழியர் மணிகண்டன் அவர்களிடம் பணத்தை கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் கணக்கில் பணம் ஏறியதால் ஆத்திரம் அடைந்த மூன்று பேரும் பெட்ரோல் பங்க் ஊழியர் மணிகண்டனிடம் தகராறில் ஈடுபட்டு அசிங்கமாக திட்டி தாக்கியுள்ளனர். அப்போது தடுக்க வந்த மற்றொரு ஊழியரான நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஹரிஹரனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சட்டக் கல்லூரி மாணவர் சிவபாலன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் கலைச்செல்வனை தேடி வருகின்றனர். கைதான சிவபாலன் சென்னை சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு: பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.