அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை: அமைச்சர் கேள்வி

சட்டப்பேரவையில் நேற்று நீதி நிர்வாகம், சிறைகள் மற்றம் சீர்திருத்த பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கன்னியாகுமரி தளவாய்சுந்தரம் (அதிமுக) பேசியதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்ற எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.

* சட்ட அமைச்சர் ரகுபதி: ஒன்றிய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். மாநில அரசு எடுத்தால் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்காது. 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு எடுக்கட்டும். அதற்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை.

* தளவாய்சுந்தரம்: உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தலாம் என தெரிவித்துள்ளது.

* அமைச்சர் ரகுபதி: அப்படியென்றால், கடந்த 10 ஆண்டுகள் நீங்கள் (அதிமுக) ஆட்சியில் இருந்தீர்களே? ஏன் எடுக்கவில்லை.

* தளவாய்சுந்தரம்: எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து அரசாணை போட்டார். நீங்கள் தான் அதை செயல்படுத்தவில்லை.

* அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: அந்த அரசாணை தேர்தலுக்காக போடப்பட்டது. அந்த ஆணையத்தில் எந்த பணியும் நடக்கவில்லை. அலுவலகமும் கொடுக்கவில்லை. ஆணையத்தின் தலைவர் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தார்.

* தளவாய்சுந்தரம்: தற்போது நீங்கள் தானே ஆட்சியில் உள்ளீர்கள். அதனை செயல்படுத்த வேண்டும்.
2013ல் கச்சத்தீவை மீட்க திமுக வழக்கு போட்டது. திமுக, ஆட்சியில் இருக்கும்போது வழக்கு போடவில்லை. இது, எந்தவிதத்தில் நியாயம்?

* அமைச்சர் ரகுபதி: 2008ல் நீங்களும் ஆட்சியில் இல்லாதபோது தான் கச்சத்தீவு பற்றி வழக்கு தொடர்ந்தீர்கள். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு அனுமதித்த மறுநாளே முதல்வராக இருந்த கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாடு அரசு இதற்கு ஒப்புக்கொள்ளாது என தெரிவித்துள்ளார். இது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்னை. எல்லோரும் இணைந்து போராடி மீட்போம்.

The post அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை: அமைச்சர் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: