நாடாளுமன்ற வளாகத்தில் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை கண்டித்து காங்.எம்பிக்கள் போராட்டம்: அரசு பதிலளிக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை கண்டித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவு வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வரிவிதிப்பு ஏப்ரல் 2ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்தார். அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா மீது 27 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அவர் தெரிவித்தார். பரஸ்பர வரி விதிக்கப்படும் 60 நாடுகளின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் வெளியிடப்பட்டது. டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்றுமுன்தினம் தெரிவிக்கையில்,‘‘ அமெரிக்கா அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடும்.

குறிப்பாக ஆட்டோமொபைல், மருந்து மற்றும் விவசாயம் துறை கடுமையாக பாதிக்கப்படும்’’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,நேற்று மக்களவையில் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு முறை பற்றி காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், வக்பு மசோதா நிறைவேற்றம் பற்றி காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதை குறிப்பிட்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். இதில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பை கண்டித்து ஊர்வலமாக சென்ற எம்பிக்கள் இது பற்றி நாடாளுமன்றத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

The post நாடாளுமன்ற வளாகத்தில் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை கண்டித்து காங்.எம்பிக்கள் போராட்டம்: அரசு பதிலளிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: