அகமதாபாத்: “நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என நித்தியானந்தா கூறினார். ‘கதவைத்திற காற்று வரட்டும்’ என்ற ஆன்மிக கட்டுரை எழுதியதன் மூலம் பிரபலமானவர் நித்தியானந்தா. ஆனால் இவர், ஆபாச வீடியோ முதல் மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்து கொண்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். குஜராத் மாநிலம் அமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் போலீசார் தேடுவது அறிந்து, தென் பசிபிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கு கைலாசா என்று பெயரிட்டு அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி கொண்டிருந்தபோது, உடல் நலக்குறைவால் நித்யானந்தா இறந்து விட்டதாக கூறினார்.
இது அவரது பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையிலேயே அவர் இறந்துவிட்டாரா? அல்லது போலீஸ் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான புதிய யுக்தியா என அகமதாபாத் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 3ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பக்தர்களுக்கு விளக்கம் அளிப்பதாக நித்யானந்தா தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று அதிகாலையில் யூடியூப் நேரலையில் நித்தியானந்தா தோன்றி பேசியதாவது: இன்று, ஏப்ரல் 3, வியாழக்கிழமை இந்திய நேரப்படி 4.39 மணிப்படி நான் உயிரோடு, ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். கடைசியாக வெளியிட்ட வீடியோ பழையது. கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கான உலகின் முதல் ஆன்மிக ஏ.ஐ. செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்.
மற்ற நாடுகளின் உள்நாட்டு பிரச்னைகள் பற்றி கேள்வி கேட்பார்கள் என்பதால் மட்டுமே நேரலையில் பேட்டி கொடுப்பதை தவிர்க்கிறேன். கைலாசா பற்றியும் என்னை பற்றியும் கேட்டால் எப்போதும் பதில் தர காத்திருக்கிறேன். பலர் கைலாசாவை கட்டுப்படுத்த நினைத்தாலும் அவர்கள் நினைக்கும் போக்கிலே கைலாசாவை நடத்த நினைத்தாலும் அது நடக்காமல் போவதால் ஏற்படும் கோபம் மற்றும் அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நான் அறிவேன். ஆனாலும் அண்ணாமலையார் (இறைவன்) சொல்வதைத்தான் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். அப்போது, இது நேரலைதான் என காட்டுவதற்கு யூடியூப் லைவில் கமென்ட் ஒன்றை நித்தியானந்தா படித்து காட்டியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்து சாஸ்திரங்களுக்கான உலகின் முதல் ஆன்மிக ஏ.ஐ. செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். அதனால் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்.
The post உயிரோடு, ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்: ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்காதது குறித்து நேரலையில் நித்தியானந்தா விளக்கம் appeared first on Dinakaran.