மக்களவையில் 8 மணி நேரம் விவாதிக்க முடிவு; வக்பு திருத்த மசோதா இன்று தாக்கல்: ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்க்க திட்டம்

புதுடெல்லி: மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்க்க முடிவு செய்துள்ளன.

வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதில் அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதோரை நியமனம் செய்வது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய திருத்தங்களுடன் வக்பு சட்டத்தை திருத்த ஒன்றிய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு ஆய்வைத் தொடர்ந்து வக்பு திருத்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்நிலையில், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 4ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்குள் வக்பு மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக வக்பு மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. காலை 11 மணிக்கு அவை தொடங்கியதும், கேள்வி நேரம் முடிந்த உடனே நண்பகல் 12 மணிக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த மசோதா விவகாரத்தில், ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான முரண்பாடு நிலவும் நிலையில், நேற்றைய அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்திலேயே மோதல் வெடித்தது. வக்பு மசோதா மீதான விவாதம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் முக்கிய கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட அலுவல் ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின ஆனால், 8 மணி நேரம் மட்டுமே விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து பேட்டி அளித்த ஒன்றிய சிறுபான்மையினர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘அலுவல் கூட்டத்தில் சில எம்பிக்கள் 4 முதல் 6 மணி நேரம் ஒதுக்க வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் 12 மணி நேரம் கேட்டனர். இறுதியில் சபாநாயகர் 8 மணி நேரம் ஒதுக்கினார். தேவைப்பட்டால் இந்த நேரம் மேலும் நீட்டிக்கப்படும். ஆக்கப்பூர்வமான விவாதத்தை அரசு விரும்புகிறது. இந்த விஷயத்தில் அனைவரின் நிலைப்பாட்டை நாடு அறிய வேண்டும். ஆனால் சிலர் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி விவாதத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்’’ என்றார்.

காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் கூறுகையில், ‘‘அரசு நினைத்தை செய்ய விரும்புகிறது. எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. வக்பு திருத்த மசோதா குறித்து அதிக நேரம் விவாதிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அதே போல, மணிப்பூரில் நிலவரம், வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சர்ச்சைகள் குறித்தும் அவையில் விவாதிக்க வேண்டுமென விரும்புகிறோம். அதைப் பற்றி அரசு தரப்பு அக்கறை காட்டவில்லை’’ என்றார்.

மசோதாவை கடுமையாக எதிர்க்கும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘‘இந்த மசோதா முஸ்லிம்களின் மத சுதந்திரத்தை அடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதை விவாதத்தில் முன்வைப்பேன். வக்பு மசோதாவை ஆதரித்தால் பாஜவின் கூட்டாளிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்திற்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்’’ என்றார்.

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றுபட்டு மசோதாவை எதிர்க்க முடிவு செய்துள்ளனர். அதே சமயம், மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜ கட்சி தீவிரமாக உள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் கடும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவையை தொடர்ந்து நாளை மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படும். எனவே அடுத்த 3 நாட்கள் அனைத்து காங்கிரஸ் எம்பிக்களும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காலை 11 மணி முதல் இறுதி வரையிலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு
வக்பு மசோதா தாக்கல் செய்யப்படுவதையொட்டி, நாடாளுமன்றத்தை சுற்றி டெல்லி போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு
வக்பு மசோதா குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று மாலை நடந்தது. இதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் கே.சி.வேணுகோபால், சமாஜ்வாடி எம்பி ராம் கோபால் யாதவ், தேசியவாத காங்.கின் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரசின் கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் கனிமொழி, மதிமுக தலைவர் வைகோ, ஆர்ஜேடியின் மனோஜ் குமார் ஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மசோதாவை நிறைவேற்ற எத்தனை ஓட்டு வேண்டும்
மொத்தம் 542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் ஒரு மசோதாவை நிறைவேற்ற 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. இதில் பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். பாஜவுக்கு 240 எம்பிக்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12, லோக் ஜனசக்தி 5, ஆர்எல்டி 2, சிவசேனா 7 எம்பிக்களை கொண்டுள்ளன. மாநிலங்களவையை பொறுத்த வரையில் மொத்தமுள்ள 236 எம்பிக்களில் 119 பேரின் ஆதரவு தேவை. பாஜ கூட்டணிக்கு 123 எம்பிக்கள் உள்ளனர். பாஜவுக்கு 98 எம்பிக்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் 4, தெலுங்கு தேசம் 2, தேசியவாத காங்கிரஸ் 3, ஆர்எல்டி 1 எம்பிக்களை கொண்டுள்ளன. எனவே, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருந்தால் பாஜவால் இரு அவைகளிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மக்களவையில் 8 மணி நேரம் விவாதிக்க முடிவு; வக்பு திருத்த மசோதா இன்று தாக்கல்: ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்க்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: