டெல்லியில் ரூட் மாறி, 3 கார்கள் மாறி சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை கலாய்த்த துணை முதல்வர் உதயநிதி

சட்டப்பேரவையில் நேற்று திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அவசரப் பணியாக டெல்லி சென்று திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவருக்கும் வணக்கம். நான் பதிலுரையாற்றும் சமயங்களில் ஒருமுறைகூட அவர்கள் அவையில் இருப்பதில்லை.

அதை நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய காரில் ஏறி, அவர் செல்ல முயன்றபோது, தயவுசெய்து எனது காரை எடுத்துச் செல்லுங்கள்; எனக்கொன்றும் பிரச்னையில்லை என்று நான் சொன்னேன். அப்போது அண்ணன் ஓ.பி.எஸ். எழுந்து நின்று, எங்கள் கார் தவறாக எங்கும் சென்று விடாது என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு டெல்லியில் ரூட் மாறி, கிட்டத்தட்ட 3 கார்கள் மாறி எதிர்க்கட்சி தலைவர் சென்றிருக்கிறார்.

அவர்களது கட்சி அலுவலகத்திற்கு சென்றிருப்பதாக சொன்னார்கள். அதற்கு வாழ்த்துகள். (அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.) பொதுவாக ஒரு பேப்பரில் எழுத ஆரம்பிக்கும்போது, சிலர் ‘உ’ போட்டு, அதற்கு கீழே இரண்டு கோடுகள் போட்டு எழுத தொடங்குவார்கள். ஆனால், நம்முடைய முதல்வர் ‘ரூ’ போட்டு பட்ஜெட்டை ஆரம்பித்திருக்கிறார். பட்ஜெட்டில் ஒரே ஒரு ‘ரூ’ போட்டு, டெல்லியை அலறச் செய்தவர்தான் நம்முடைய முதல்வர். இப்படிப்பட்ட நம்முடைய தலைவர் இருக்கின்றவரை, தமிழ்நாட்டுக்குள் இந்தி திணிப்பு மட்டுமல்ல; எந்த திணிப்பையும் யாராலும் கொண்டு வந்துவிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

The post டெல்லியில் ரூட் மாறி, 3 கார்கள் மாறி சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை கலாய்த்த துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.

Related Stories: