மூத்த தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்; காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் மாவட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம்: கலந்துரையாடலில் ராகுல் காந்தி அறிவிப்பு

* தமிழகத்தில் இருந்து எம்.எஸ்.திரவியத்திற்கு பேச வாய்ப்பு

சென்னை: நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கட்சி தலைமை பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநில தலைமைக்கும் பூத் கமிட்டி அமைப்பது, கிராமம் வாரியாக கட்சியை வலுத்தப்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் மாவட்ட தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்க அகில இந்திய தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை டெல்லிக்கு அழைத்து அவர்களிடம் கருத்து கேட்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து முதன்முறையாக கட்சி தலைமை மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை முதற்கட்டமாக தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்களை நேற்று டெல்லிக்கு அழைத்தது. அவர்களுடன் டெல்லி இந்திரா பவனில் 14 மாநிலங்களை சேர்ந்த 750 மாவட்ட தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். முதற்கட்டமாக தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 61 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ராகுல்காந்தி யாராவது ஒரு மாவட்ட தலைவர் எழுந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து மூன்று ஆலோசனையை கூறுங்கள் என்று கூறினார்.

அப்போது 30க்கும் மேற்ப்பட்ட மாவட்ட தலைவர்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் தங்கள் கைகளை உயர்த்தினர். அவர்களில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியத்தை பேசுங்கள் என்று ராகுல்காந்தி அழைத்தார். அப்போது தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து மூன்று கருத்துகளை அவர் தெரிவித்தார். அதாவது பிரதமர் மோடியின் மக்கள் விரோத செயல்களை வீடு, வீடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட தலைவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில் கட்சியை வலுப்படுத்த மாவட்ட தலைவர்களுக்கு என்னென்ன அதிகாரிங்கள் வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் தேர்தல்களின் போது வேட்பாளர் தேர்வில் மாவட்ட தலைவர்களை கலந்தாலோசிக்கிறார்களா? என்றும் கேட்டார். அதற்கு வேட்பாளர்களை டெல்லி தான் முடிவு செய்கிறது என்று தெரிவித்தனர். அப்போது வேட்பாளர்கள் குறித்து அந்தந்த மாவட்ட தலைவர்களுக்கு தான் முழுமையாக தெரியும்., எனவே வேட்பாளர்கள் தேர்வில் மாவட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார். டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் மாவட்ட தலைவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்குவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என ராகுல் காந்தி கூறினார்.

The post மூத்த தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம்; காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் மாவட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம்: கலந்துரையாடலில் ராகுல் காந்தி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: