ஒட்டாவா: 25% வரிக் கொள்கையை அமல்படுத்துவதால் புதிய வர்த்தகப் போரை டிரம்ப் ெதாடங்கியுள்ளதாக கனடா பிரதமர் சரமாரி குற்றச்சாட்டினார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார் மற்றும் கார் உதிரி பாகங்கள் மீது 25% வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலகளாவிய உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதிபராக டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடிகளுக்கு பஞ்சமின்றி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறிய டிரம்ப் அதிரடியாக பல்வேறு நாடுகள் மீது வரியை விதித்து அதிர்ச்சி கொடுத்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான புதிய வரிகளை டிரம்ப் அறிவித்ததற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டிரம்பின் அறிவிப்பானது எங்களது நாட்டின் மீதான நேரடி தாக்குதல்; டிரம்ப் தொடுத்துள்ள வர்த்தகப் போர் அமெரிக்கர்களுக்கே தலைவலியாக மாறும். கார்கள் மற்றும் கார் பாகங்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்பட்டதால் அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்தன. எங்கள் நிறுவனங்களையும், நாட்டையும் பாதுகாக்க நடடிக்கை எடுப்போம்.
டிரம்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் ஆட்டோமொபைல் துறையைப் பாதுகாக்க 1.4 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும். அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன், டிரம்பின் நிர்வாக உத்தரவின் சரியான விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். கனடாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதித் துறையாக வாகனத் துறை உள்ளது. இந்தத் துறை 125,000 கனடா மக்கள் நேரடியாகவும், தொடர்புடைய தொழில்களில் சுமார் 5,00,000 பேரைரும் வேலை செய்து வருகின்றனர். புதிய வரிகள் ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். கார் பாகங்களுக்கு விதிக்கப்படும் வரி மே மாதம் முதல் அமலுக்கு வரும் என்கின்றனர்’ என்று கூறினார்.
புதிய வரிக் கொள்கையை அமல்படுத்துவதால் அமெரிக்க ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய ஊக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும், சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், முதலீட்டை அதிகரிக்கும் என்றும் டிரம்ப் கூறுகிறார். இதற்கிடையில், டிரம்பின் புதிய கொள்கை அமெரிக்க கார் உற்பத்தித் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கார் உற்பத்தி கடுமையாகக் குறையும் என்றும், விலைகள் அதிகரிக்கும் என்றும், மற்ற நாடுகளுடனான வர்த்தக உறவுகள் மோசமடையும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கனடா மற்றுமின்றி இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் டிரம்பின் அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.
The post 25% வரி கொள்கையை அமல்படுத்துவதால் புதிய வர்த்தகப் போரை தொடங்கிய டிரம்ப்: கனடா பிரதமர் சரமாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.