தொகுதி மறுவரையறை மூலம் எஸ்சி, எஸ்டி தொகுதிகளை குறைக்க பாஜக சதி: ஜார்கண்ட் முதல்வர் ஆவேசம்


ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ஒன்றிய அரசின் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரையில், ‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான திட்டமிட்ட சதி நடக்கிறது. பாஜக தலைவர்கள் சிலர் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்; ஆனால் எதுவும் செய்வதில்லை. தொகுதி மறுவரையறை திட்டத்தின் பின்னால் திரைமறைவில் பாஜகவின் தனித்திட்டம் உள்ளது.

இதனை நாங்கள் கூர்மையாக கவனித்து வருகிறோம். நடப்பு நிதியாண்டுக்கான ரூ.1.45 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளோம். டெல்லி உட்பட பல மாநிலங்களில் பெண்களுக்கான உதவித் தொகை திட்டத்தை வழங்குவதாக பாஜக அறிவித்தது. ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்தப்படவில்லை. விரைவில் வால்மீகி உதவித்தொகை திட்டத்தை தொடங்குவோம். இத்திட்டத்தின் மூலம் ரூ.4,000 வழங்கப்படும். எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு நடத்துகிறது.

ஒன்றிய அரசிடமிருந்து ஜார்கண்ட்டுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் கிடைக்கவில்லை. பல்வேறு நிலக்கரி நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது. நூறு நாள் திட்டப் பயனாளிகளுக்கு தரவேண்டிய ரூ.1,200 கோடியும், குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.6,000 கோடியும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை’ என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.

The post தொகுதி மறுவரையறை மூலம் எஸ்சி, எஸ்டி தொகுதிகளை குறைக்க பாஜக சதி: ஜார்கண்ட் முதல்வர் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: