புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கேட்டு 16வது முறையாக தீர்மானம்: 15 முறை ஒன்றிய அரசு கைவிரித்ததால் மீண்டும் நிறைவேற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். இறுதி நாளான நேற்று எதிர்கட்சி தலைவர் சிவா மற்றும் எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், வைத்தியநாதன், நாக.தியாகராஜன், நேரு ஆகியோர் மாநில அந்தஸ்து கோரும் தனிநபர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசுகையில், ‘புதுச்சேரி மாநிலத்துக்கு 15 முறை மாநில அந்தஸ்து வேண்டி சட்டப்பேரவை மூலமாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியும் நமக்கு அதிகார விடுதலை இன்னமும் கிடைக்கவில்லை.

முன் எப்போதும் இல்லாத நிதிச்சுமையிலும், நிர்வாக அதிகாரம் இல்லாமலும் மற்ற மாநிலங்களை போல துரித நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அரசு அறிவிக்கிற திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்ற முடியவில்லை. எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்’ என ஒன்றிய அரசை இச்சட்டப் பேரவை வலியுறுத்துகிறது என்று முன்மொழிந்தனர்.

பின்னர் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பது அரசு மற்றும் மக்களின் எண்ணம். அந்த கருத்து எல்லோரிடமும் உருவாகி இருக்கிறது. தொடர்ந்து மத்திய அரசை கேட்போம். அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்புவோம். எனவே, தனிநபர் தீர்மானத்தை அனைவரும் திரும்ப பெற்று அரசின் தீர்மானமாக கொண்டுவர வேண்டும்’ என்றார். இதை தொடர்ந்து சபாநாயகர் செல்வம் இத்தீர்மானத்தை அரசின் தீர்மானமாக கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றினார்.

The post புதுச்சேரி சட்டசபையில் மாநில அந்தஸ்து கேட்டு 16வது முறையாக தீர்மானம்: 15 முறை ஒன்றிய அரசு கைவிரித்ததால் மீண்டும் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: