கல்லால் சரமாரி தாக்கி போலீஸ்காரர் கொலை

உசிலம்பட்டி: மது போதையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (40). போலீஸ்காரர். உசிலம்பட்டி இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக இருந்தார். நேற்று மாலை பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள மதுபான கடையில் நண்பருடன் சென்று மது அருந்தியுள்ளார்.

அப்போது அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் போலீஸ்காரர் முத்துக்குமாரை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். கொலையான போலீஸ்காரர் முத்துக்குமாருடன் சேர்ந்து மது அருந்திய கள்ளபட்டியைச் சேர்ந்த நண்பர் ராஜாராம் படுகாயமடைந்தார். இவருக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த மதுரை எஸ்பி அரவிந்த், உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸ்காரர் ஒருவர் கும்பலால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் சமீபத்தில் கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள பொன்வண்டு என்பவர், தனது ஆதரவாளர்களுடன் வந்து தகராறு செய்து கொலை செய்து தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் வேகப்படுத்தியுள்ளனர்.

The post கல்லால் சரமாரி தாக்கி போலீஸ்காரர் கொலை appeared first on Dinakaran.

Related Stories: