விழுப்புரம், மார்ச் 28: விழுப்புரத்தில் கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டல் விடுத்த சகோதரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.விழுப்புரம் கே.கே ரோடு சேர்ந்தவர் ஞானசேகர் மகன்கள் ராஜசேகர்(33). வல்லரசு(28). இவர்கள் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கேகே ரோட்டில் உள்ள மளிகை கடையில் தகராறு செய்தனர். தட்டிக்கேட்ட முகமதுஇப்ராஹிம் என்பவரை கொலை செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை வழக்கு விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அதே மளிகை கடையில் பணியாற்றி வரும் கந்தசாமி மகன் ராஜசேகரன் என்பவர் மூன்றாவது அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று இந்த கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று மளிகை கடைக்குள் புகுந்து ராஜசேரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் ராஜசேகர், வல்லரசு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டல் appeared first on Dinakaran.