ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

புதுச்சேரி, மார்ச் 28: புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு நகரப்பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி தற்காலிக பேருந்து நிலையத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகனத்தில் ரோந்து வந்தபோது மர்ம நபர் ஒருவர் போலீசாரை பார்த்தவுடன் திடீரென ஓட்டம் பிடித்தார்.உடனே சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை விரட்டி பிடித்து அவரது பையில் சோதனையிட்டனர். அப்போது அவரது பையில் 4கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 1.6 லட்சம்.இதுகுறித்து போலீசார் விசாரணையில், புதுச்சேரி ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சித்தானந்தம் (20) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி, புதுவையில் விற்க எடுத்து வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், சித்தானந்தம் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து சித்தானந்தத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து சீனியர் எஸ்.பி. கலைவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற திட்டத்தின் மூலம் கஞ்சா விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி கடந்த 2024ம் ஆண்டு புதுவையில் சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 299 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 69.52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேர் மீது (PITNDPS Act) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் சுமார் 240 கஞ்சா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் தங்கள் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தகவல் தெரிவிப்பவரின் விவரங்களை காவல்துறையினர் பாதுகாப்பாக வைத்துக்கொள்வர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: