இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய வாடகை டெண்டரில் புதியதாக பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், சங்க உறுப்பினர்களின் அனைத்து எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்களில் சமையல் எரிவாயு ஏற்றி வரும்போது எடை குறைவு ஏற்பட்டால், வாகனங்கள் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படும். 21 டன் எடை காஸ் ஏற்றும் 3 ஆக்ஸில் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போன்ற புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று காலை 6 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை கோவையில் 3 ஆயில் நிறுவன உயரதிகாரிகளுடன், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க ஆயில் நிறுவனஅதிகாரிகள் முன்வரவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது: ஆயில் நிறுவனங்களில் செயல் இயக்குனருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. முதலில் வாகனங்களை இயக்குங்கள்.
பின்னர் பிரச்னை குறித்து பேசிக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினார்கள். ஆனால், வாகனங்களை இயக்கத் தொடங்கினால், பிரச்னை முடியாது. 40 ஆண்டு காலமாக இந்த தொழில் செய்து வருகிறோம். அபராதம் தொகை செலுத்தி விட்டு தொழில் செய்ய முடியாது. இதை அவர்களிடம் தெளிவு படுத்திவிட்டோம். நல்ல முடிவு வரும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும். மற்ற மண்டலங்களிலும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளனர். இதனால், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். நியாயமான கோரிக்கையை ஆயில் நிறுவன அதிகரிகள் உதாசீனப்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 4 ஆயிரம் காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் என அறிவிப்பு; சமையல் காஸ் தட்டுப்பாடு அபாயம் appeared first on Dinakaran.
