சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.எம்.தமிழ் செல்வம் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி, காட்டேரி ஊராட்சியில் உள்ள அனுமந்தீர்த்தம் கிராமம், அருள்மிகு அனுமந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு திருமண மண்டபம் அமைக்க அரசு முன்வருமா ?
அமைச்சர் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய அருள்மிகு அனுமந்தேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமாக இடமும் இல்லை நிதியும் இல்லை. இருந்தாலும் அவரது கேள்விக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அருகிலே இருக்கின்ற மற்றொரு திருக்கோயிலான அருள்மிகு மயிலாடும் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டித் தருவதற்கு உண்டான முயற்சிகளை நிச்சயம் மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.எம்.தமிழ் செல்வம் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி கல்லாவி ஊராட்சியில் வேடியப்பன் கோயில் உள்ளது. ஊத்தங்கரை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த கோயிலில் திருமணம், காதுகுத்து, முடிகாணிக்கை செய்தல் பலர் ஒன்று கூடி ஆடு, கோழி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அங்கே சமைத்து உணவருந்துகின்றனர். எனவே கோயிலுக்கு மண்டபம் கட்டித்தர தங்கள் வாயிலாக அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கூறியதை ஏற்றுதான் நிச்சயமாக இந்த மண்டபம் கட்டித் தரப்படும் என்று சொல்லி இருக்கின்றேன். இந்த ஆண்டு கூட 30க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருமண மண்டபம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அதனை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தேவைப்படும் இடங்களில் நிச்சயம் திருமண மண்டபங்கள் ஏற்படுத்தி தரப்படும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 85 திருமண மண்டபங்கள் சுமார் 347 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றது. அதில் இதுவரையில் 24 திருமண மண்டபங்கள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை பேரவை தலைவர் வாயிலாக இந்த மன்றத்தில் பதிவு செய்கிறேன். உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். அதற்குண்டான ஆய்வுகள், சாத்திய கூறுகள் ஆராயப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.எம்.தமிழ் செல்வம் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி ஊத்தங்கரை நகரில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் நூறாண்டுகள் பழமையான கோயில். இக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அரசு ஆவணம் செய்யுமா என தங்கள் வாயிலாக அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கூறிய பழமையான திருக்கோயிலில் பக்தர்கள் வருகை மிக குறைவாக இருக்கின்றது. இருந்தாலும் உறுப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்று வாரத்தில் எந்த நாட்களில் அந்த திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகமாக வருகிறார்களோ அந்த ஒரு நாளைக்காவது நூறு பேருக்கு குறைவில்லாமல் அன்னதானம் வழங்கும் திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் திருமதி அ.தமிழரசி அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் முருகன் மாநாடு நடத்தி பக்தர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டது போல, சமத்துவம் பேணுகின்ற தாய் உள்ளம் கொண்ட முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் சக்தி மாநாடு நடத்தி சமத்துவம் பேணப்படுமா என்பதை அமைச்சர் அவர்களே அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு சக்திகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள் என்பதை நம்முடைய உறுப்பினர் நன்றாக அறிவார்கள். முதல்வர் அவர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் இருளைப் போக்குகின்ற ஒளி தருகின்ற வழிபாடு என்று கருதப்படுகின்ற திருவிளக்கு பூஜையை முதல் முதலில் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களோடு இணைந்து குலசேகரபட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் தொடங்கி வைத்தோம். தீபஒளி ஏற்றுகின்ற பௌர்ணமி திருவிளக்கு பூஜை இன்றைக்கு 20 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு இதுவரையில் 58,600 பக்தர்கள் பலனடைந்திருக்கின்றார்கள். அதே போல் கடந்த ஆண்டு ஆன்மீகப் பயணத்தை ஏற்படுத்தி 1,031 சக்திகள் அந்த ஆன்மிக பயணத்திலும் பயனடைந்திருக்கின்றார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 60,000 சக்திகள் பயனடைந்து இருப்பதால் சக்தி மாநாடு என்று ஒன்று தனியாக தேவைப்படவில்லை என்பதை உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
The post இதுவரை 24 திருமண மண்டபங்கள் கட்டி முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.