நித்யானந்தா தலைமறைவு குற்றவாளி சிஷ்யைகளை வெளியேற்ற தடை: ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு

மதுரை: நித்யானந்தா தலைமறைவு குற்றவாளி. அவர் தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? இதனால் அவரது ஆசிரமத்தில் இருந்து சிஷ்யைகளை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நித்யானந்தா தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூர் மற்றும் கோதை நாச்சியாபுரம் கிராமத்தில் மருத்துவர் கணேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நித்யானந்தா ஆசிரமம் உள்ளது.

இங்குள்ள நித்யானந்தாவின் சீடர்கள், சிஷ்யைகளை வெளியேற வேண்டும் என கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ராஜபாளையம் டிஎஸ்பி, சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நித்யானந்தா ஆசிரமரத்தில் உள்ள சிஷ்யைகளை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வழக்கு நிலுவையில் இருக்கும் வரை யாரையும் வெளியேற்ற கூடாது என்றும், கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர், ‘‘நித்யானந்தா தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் இல்லை. அவர் தொடர்பான வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? நித்யானந்தாவுக்கும், அவரின் மடம் தொடர்பான சொத்துகளுக்கும் தொடர்பு இல்லை எனக்கூறி அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது’’ என்று கூறி, நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள பக்தர்கள் மற்றும் சிஷ்யைகளை வெளியேற்ற இடைக்கால தடை விதித்தார். பின்னர் மனுவிற்கு ராஜபாளையம் டிஎஸ்பி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

The post நித்யானந்தா தலைமறைவு குற்றவாளி சிஷ்யைகளை வெளியேற்ற தடை: ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: