காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக துணை முதல்வருமான டி.கே.சிவகுமார், ‘மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய பரிந்துரை செய்யப்படும்’ என்று கூறியதாக கர்நாடகா மாநில எதிர்கட்சியான பாஜகவின் தலைவர் குற்றம்சாட்டினர். இவ்விவகாரம் கர்நாடகா சட்டப் பேரவை மற்றுமின்றி நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. டி.கே.சிவக்குமார் கூறாத ஒன்றை, பாஜக தலைவர்கள் வேண்டுமென்றே திரித்துக் கூறுவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இந்நிலையில் டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில், ‘என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால், நான் அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். எனது அரசியல் எதிர்காலத்தை பொறுத்துக்கொள்ள முடியாததால், பாஜக தலைவர்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர்.
காங்கிரஸ் உயர்மட்டக் குழு, நான் கூறிய கருத்துகள் குறித்து விசாரித்தது. நான் கூறிய கருத்துகளை கட்சித் தலைமையிடம் தெளிவாக கூறிவிட்டேன். அரசியலமைப்பை மாற்றுவது குறித்து, நான் எப்போதாவது பேசி இருந்தால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இருக்கிறேன். அவர்கள் (பாஜக) இந்த சவாலை ஏற்றுக்கொள்வார்களா? நான் எங்கே சொன்னேன்? என்று அவர்கள் சொல்லட்டும். பாஜகவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. டிவி செய்தி சேனலில் நான் கொடுத்த முழு நேர்காணலையும் பார்த்துவிட்டு அவர்கள் பேசட்டும். வேண்டுமென்றே எனது பேட்டியை திரித்து கூறியுள்ளனர். நான் கூறிய கருத்தை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இவ்விசயம் தொடர்பாக உரிமை மீறல் தீர்மானத்தைக் கொண்டு வருவேன்’ என்றார்.
The post குற்றச்சாட்டை பாஜக நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுகிறேன்: கர்நாடகா துணை முதல்வர் கோபம் appeared first on Dinakaran.