*ரூ.80 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
திருப்பத்தூர் : ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மட்றப்பள்ளியில் நேற்று நடந்த வாரச்சந்தை களைகட்டியது. ரூ.80 லட்சத்திற்கு ஆடு, மாடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு, கோழி மற்றும் பல்வேறு பொருட்களை விற்கவும் வாங்கவும் வந்து செல்கின்றனர்.
நெருங்கி வரும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தங்களுக்கான தேவையான ஆடு, கோழி மற்றும் மாடுகளை தேர்வு செய்து வாங்கிச்செல்ல ஏராளமானோர் மட்றப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று காலை முதலே குவிந்தனர். இதனால் சந்தை களைகட்டியது.
பொதுமக்கள் ஆர்வமுடன் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வாங்கிச்சென்றனர். இதனால் வழக்கமாக ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகள் தற்போது ரம்ஜான் பண்டிகை காரணமாக ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இதேபோல், நாட்டு மாடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ரம்ஜான் பண்டிகை நெருங்கியதன் காரணமாக சந்தையில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இன்று(நேற்று) நடந்த சந்தையில் ₹80 லட்சம் வரை ஆடு, மாடு மற்றும் கோழிகள் விற்பனை நடந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் விற்பனை நடந்து வருகிறது.
The post ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மட்றப்பள்ளி வாரச்சந்தை களைகட்டியது appeared first on Dinakaran.