இந்த பணத்திற்கும் தனது குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என கூறி உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா, தீ விபத்து நடந்த போது மனைவியுடன் வெளியூரில் இருந்ததாக கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை சமர்பித்துள்ளார். எனவே, 3 நீதிபதிகள் கொண்ட உள் விசாரணை குழுவை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வீடியோக்களையும் அவர் தரப்பு விளக்கம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதற்கட்ட விசாரணை அறிக்கையும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதோடு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததோடு, மறு உத்தரவு வரும் வரை அவருக்கு எந்த பணியும் ஒதுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் ஷீல் நாகு, ஜி.எஸ்.சாந்தவாலியா, அனு சிவராமன் ஆகியோர் கொண்ட உள் விசாரணை குழு நேற்று டெல்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ வீட்டில் விசாரணையை தொடங்கினர். பிற்பகல் 1 மணிக்கு சென்ற அவர்கள் சுமார் 35 நிமிடங்கள் வரை விசாரணை மேற்கொண்டனர். அப்போது தீ விபத்து நடந்த ஸ்டோர் ரூமில் பணம் கைப்பற்றப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். உள் விசாரணை அறிக்கை சமர்பிக்க எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. இதன் அறிக்கையின்படி, நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கிடையே, இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நேற்றும் எதிரொலித்தது. நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடத்த வேண்டுமென காங்கிரஸ் எம்பி ஹைபி ஈடன் பூஜ்ய நேரத்தில் வலியுறுத்தினார். ஜனநாயகத்தின் மிக முக்கிய தூணாக விளங்கும் நீதித்துறை ஊழல் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார். அவருடன் பல்வேறு காங்கிரஸ் எம்பிக்களும் விவாதம் நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.
இதே போல மாநிலங்களவையில் கேரளாவைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த ஹரிஸ் பீரன் விதி 267ன் கீழ் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்திருந்தார். இதை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்தார். அவர் பேசுகையில், ‘‘சந்தேகமின்றி இந்த விவகாரம் மிகத்தீவிரமானதுதான்.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக அவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆளுங்கட்சி தலைவர் நட்டாவுடன் நேற்று (நேற்று முன்தினம்) ஆலோசனை நடத்தினேன். அதில் கார்கே வலியுறுத்திய படி இன்று (நேற்று) அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் சந்திக்கிறேன்’’ என உறுதி அளித்தார். அதன்படி நேற்று மாலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
* அலகாபாத் வக்கீல்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அலகாபாத் உயர் நீதிமன்ற வக்கீல்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. அம்மாநில பார் அசோசியேஷன் தலைவர் அனில் திவாரி அளித்த பேட்டியில், ‘‘எங்கள் போராட்டம் நீதிமன்றத்திற்கோ, நீதிபதிக்கோ எதிரானது அல்லது. நீதி அமைப்பிற்கு துரோகம் செய்தவர்களை கண்டித்து நடக்கும் போராட்டம் இது. எனவே இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை’’ என்றார்.
The post நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் 3 நீதிபதிகள் குழு விசாரணை தொடங்கியது: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எம்பிக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.