மங்கலம்பேட்டை, மார்ச் 26: கம்மாபுரம் பகுதியில் விளையாட்டாக தூக்குமாட்டிய பெண் புடவை இறுக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் கம்மாபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(38), மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி கார்த்திகா(30). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 4 மற்றும் 2 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு செல்ல வேண்டி நேற்றுமுன்தினம் இரவு கார்த்திகா, தனது கணவரை அழைத்துள்ளார். அதற்கு அவர் விழாவிற்கு சென்றால் மளிகை கடையை திறக்க முடியாது என்று கூறி வர மறுத்துள்ளார். இதையடுத்து அவரை சம்மதிக்க வைப்பதற்காக விளையாட்டாக புடவையில் தூக்கு மாட்டுவதுபோல கார்த்திகா நடித்துள்ளார்.
அப்போது புடவை இறுக்கி கார்த்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளார். நள்ளிரவு 2.45 மணி என்பதால் வேல்முருகன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்ததால் மனைவி தூக்கில் தொங்கியது தெரியவில்லை. பின்னர் நேற்று அதிகாலை வேல்முருகன் எழுந்து பார்த்தபோது, கார்த்திகா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு விபரீதமானது என்பதை நினைத்து உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post காதணி விழாவிற்கு கணவரை அழைத்து செல்ல விளையாட்டாக தூக்கு மாட்டிய பெண் புடவை இறுக்கி சாவு appeared first on Dinakaran.