2022-2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்மொழியின் தொன்மையையும் செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன் தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும் என்றும், தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வேர்ச்சொல் உறவினை ஆய்வுசெய்யும் இத்திட்டம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேற்பார்வையில் முதன்மைப் பதிப்பாசிரியர் முனைவர் கு. அரசேந்திரன் அவர்களின் தலைமையில் ஜூலை 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதன்மைப் பதிப்பாசிரியர் உட்பட 20 அறிஞர்கள் பணிசெய்து வருகின்றனர். இத்திட்டத்தைச் செயல்படுத்த 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தோ-ஐரோப்பிய மொழிகள் யாவும் 461 வேர்ச்சொற்களில் உருவானதென ஆங்கில வேர்ச்சொல் அறிஞர் வால்டர் ஸ்கீட் (Walter Skeat) கண்டுபிடித்துள்ளார். இந்த 461 வேர்ச்சொற்களில் 300 வேர்ச்சொற்கள் தமிழுடன் உறவுடையன என இக்குழு கருதுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை 12 தொகுதிகளாக வெளியிடத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையுடன் 13.01.2025-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினையும், முதல் தொகுதி நூலினையும் இன்றையதினம் வெளியிட, ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் இந்தியப் பிரிவின் மேலாண்மை இயக்குநர் சுகந்தா தாஸ் பெற்றுக்கொண்டார்.
இப்பொது முன்னுரை நூல், தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான உறவுகள் பற்றி இத்தாலிய அறிஞர் அல்பெரடோ டிரோம்பெட்டி (Alfredo Trombetti), ஜெர்மானிய அறிஞர் மேக்ஸ் முல்லர் (Max Muller), அயர்லாந்து அறிஞர் ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), டென்மார்க் அறிஞர் ஹோல்ஞர் பெடர்சன் (Holger Pederson), ரஷ்ய அறிஞர் இல்லிச் விட்ச் (Illich-Svitych), அமெரிக்க அறிஞர்கள் ஸ்டீபன் ஹில்யர் லெவிட் (Stephen Hillyer Levitt), ஆலன் பாம்ஹார்டு (Allan Bomhard) உள்ளிட்ட சிறந்த மொழி அறிஞர்களின் கருத்துகளுடன் இத்திட்டத்தின்கீழ் வெளிவரவுள்ள 12 தொகுதிகளையும் கற்பதற்கான வாயிலாக (gateway) அமைந்துள்ளது.
மேலும், முதல் தொகுதி நூலில் 19 தமிழ் வேர்ச்சொற்களிலிருந்து இலத்தீன், கிரேக்கம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் மற்றும் சமஸ்கிருதம், பாலி, சிங்களம் போன்ற பல கீழை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் உருவான வரலாறு, கருதுகோள் (Hypothesis) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தர மோகன் பி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர்
வே. ராஜாராமன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ. சங்கர் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் முதன்மைப் பதிப்பாசிரியர் முனைவர் கு. அரசேந்திரன், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இந்தியப் பிரிவின் வெளியீட்டு இயக்குநர் மல்லிகா கோஷ், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இந்தியப் பிரிவின் அகராதிகள் தலைவர் ஷர்மிளா குகா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் முனைவர் தே. சங்கர சரவணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.