தங்குமிடம், உணவகங்கள் வசதி என கும்பக்கரை அருவி பகுதியில் அடிப்படை வசதிகள் தேவை

*சுற்றுலா பயணிகள் கோரிக்கை

தேனி : பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி பகுதியில் தங்குமிடம், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. பெரியகுளத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த அருவியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தின் ”சின்ன குற்றாலம்” என அழைக்கப்படும் கும்பக்கரை அருவி ஒரு இயற்கையான அருவியாகும். பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக இந்த கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து உள்ளது.

கும்பக்கரை பெயர் காரணம்:

இந்தப் பகுதியில் உள்ள வீரபுத்திரன், வைரவன், செழும்புநாட்சி சோத்து மாயன், கருப்பண்ணசாமி, மாட்சி நாயக்கன் ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாக கூடுமாம். அதனால் இது கும்பல் கரை என்று முன்னர் அழைக்கப்பட்டு நாளடைவில் கும்பக்கரை என்று மருவியதாக கூறப்படுகிறது.

கும்பக்கரை நீர்வீழ்ச்சி பகுதியைத் தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானை கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்வர். சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்றும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அருவியின் நீரில் மூலிகைகள் மற்றும் தாது பொருட்களின் நற்குணங்கள் நிறைந்துள்ளதால் இதில் குளிக்க பெருந்திரளான மக்கள் வந்து குவிகின்றனர்.

மருத மரங்கள் அதிகம்:

மூலையார் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து, கும்பக்கரை அருவியாக வருகிறது. இங்கு மருத மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.மலையில் பெய்யும் மழை நீர்தான் அருவியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த அருவி. இந்த அருவியின் அருகே வன தெய்வ கோயில்கள் உள்ளன.

இரு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து

கடந்த இரு மாதங்களாக மழை பெய்யாத நிலையில் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்திருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்ததின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

மேலும், நேற்று பிற்பகல் முதல் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் அருவிடில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த இரண்டு மாத காலமாக வெயிலின் தாக்கத்தால் தவித்து வந்த மக்களுக்கு, இம்மழையானது இதமான சூழ்நிலை ஏற்படுத்தி இருக்கிறது. கும்பக்கரை அருவியில் ஆர்ப்பரித்து நீர் கொட்டுவதை அறிந்து சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

உணவகங்கள், தங்கும் இடம் தேவை:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்த கும்பக்கரை அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வர். சபரிமலை ஐயப்ப சீசன் காலங்களில் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஏராளமானோர் இந்த கும்பக்கரை அருவிக்கு அவசியம் வந்து குளித்து நீராடி விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த அருவிப் பகுதியில், இதுவரை தங்குமிட வசதியோ அல்லது உணவகங்கள் வசதியோ எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் கும்பக்கரை அருவி பகுதியில் சிறப்பான தங்குமிட வசதி மற்றும் உணவகங்களை ஏற்படுத்தி இந்த பகுதியினை தமிழகத்தில் ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post தங்குமிடம், உணவகங்கள் வசதி என கும்பக்கரை அருவி பகுதியில் அடிப்படை வசதிகள் தேவை appeared first on Dinakaran.

Related Stories: