சில்லஹல்லா நீரேற்று புனல் மின் நிலைய திட்டத்தை கைவிட கலெக்டரிடம் மனு

ஊட்டி : சில்லஹல்லா நீரேற்று புனல் மின் நிலையம் – நிலை 1 திட்டத்தை கைவிடக்கோரி சில்லஹல்லா நீர் பிடிப்பு பகுதி பாதுகாப்பு குழுவினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நீலகிாி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தா நதியின் துணை நதியான சில்லஹல்லா ஆற்றின் குறுக்கே பிக்குளி பாலம் அருகே அணை கட்டி ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ரூ.2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீர்மின் திட்டமானது செயல்படுத்தப்படும் என கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்திட்டம் தொடர்பாக நீர் தேக்கம் அமைய உள்ள பகுதியில் மின்வாாிய அதிகாாிகள் உள்ளிட்டோர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

ஒரே கட்டமாக 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் அளவிற்கு தொழில்நுட்பங்களோ, இயந்திர வடிவமைப்புகளோ இல்லாதால் இதனை நிறைவேற்றுவது சிரமம் என்பதால், இத்திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இரு கட்டங்களாக செயல்படுத்தும் வகையில் மறு ஆய்வு செய்யப்பட உள்ளதாக கடந்த 2017ம் ஆண்டு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு இத்திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றன. இதன்படி தலா 1000 மெகாவாட் உற்பத்தி செய்யும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டு கன்னேரி ஸ்ரீராம் நகர் அருகே பெம்பட்டி ஆடா மற்றும் குந்தா அருகே அன்னமலை கோயில் அடிவார பகுதி என இரு இடங்களில் அணைகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

இது நீர்மின் நிலையமாக மட்டுமின்றி, நீரேற்று குகை மின் நிலையமாக அமைக்கப்பட உள்ளது. 123.3 ஹெக்டர் வனத்துறை நிலம், 57 ஹெக்டர் அரசு நிலங்கள் மற்றும் 134.7 ஹெக்டர் என மொத்தம் 315 ஹெக்டர் நிலம் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக ரூ.5843 கோடி நிதி செலவாகும் எனவும் கூறப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு ஆயத்த பணிகள் துவக்கப்பட்ட போதே, பாதுகாக்கப்பட்ட உயிர் சூழல் மண்டலமாக உள்ள நீலகிரியில் இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என 15 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இத்திட்டம் தொடர்பாக கடந்த 20ம் தேதி குந்தாவில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற இருந்த கருத்துக்கேட்பு கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக கைவிட கோரி சில்லஹல்லா நீர் பிடிப்பு பகுதி பாதுகாப்பு குழு மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் சிவலிங்கம் தலைமையில், வழக்கறிஞர் விஜயன் மற்றும் கிராம மக்கள், பழங்குடியின மக்கள் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், சில்லஹல்லா திட்டம் வளர்ச்சி பாதைக்கு வழி வகுக்காது, இப்பகுதியில் ஏற்படுத்தப்படக் கூடிய சுரங்கப்பாதை, புதிய சாலைகள், மற்றம் அணைகள் பேரழிவுக்கு வழிவகுக்கும். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பூர்வ குடிமக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள். வன விலங்குகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். அன்னமலை அடிவார பகுதியில் ஏற்கனவே சுரங்க பணிக்காக பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்படுகிறது.

இந்த செயல்பாடுகள் நீலகிரியில் சட்ட விரோத குவாரி மற்றும் சுரங்க நடவடிக்கைகளை தடை செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே சில்லஹல்லா நீர்மின் திட்டத்தை கைவிட்டு, ஏற்கனவே உள்ள மின் திட்டங்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தப்படும் பட்சத்தில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

The post சில்லஹல்லா நீரேற்று புனல் மின் நிலைய திட்டத்தை கைவிட கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: