கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டாரங்கள் வளர்ச்சி திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில்
நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பின்தங்கிய வட்டாரங்களை தேர்வு செய்து பல்வேறு குறியீடுகள் மூலம் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாநில திட்ட குழுவின் மூலம் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டார திட்டத்தில் கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களுக்கு ஒரு வட்டாரத்துக்கு தலா ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து வளமிகு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், பள்ளி கல்வித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தனித்தனியாக துறை வாரியாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை விரைவாக மேற்கொள்ளவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய சுகாதார சேவைகளை சிறப்பாக வழங்கவும், வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2025-26ம் நிதியாண்டில் புதிய திட்டங்கள் மற்றும் பணிகள் மேற்கொள்ள உரிய திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்
உத்தரவிட்டுள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் துணை ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 வளமிகு வட்டாரங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.
