கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்படை முன்பு வரும் 27ம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்குகளில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு. இது தொடர்பாக சிபிசிஐடி தனிப்படை மூலமாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு எஸ்டேட்டின் மேலாளர் உட்பட, இதற்கு முன்பு அங்கு பணியாற்றியவர்கள் உள்ளிட்ட 250 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரராக இருந்தார். அவரை 27ம் தேதி ஆஜராகுமாறு சிபிசிஐடி தனிப்படை சம்மன் அனுப்பியதையடுத்து அவர் ஆஜராக உள்ளார். கோடநாடு எஸ்டேட்டின் நகர்வுகள், சுதாகரனின் பங்கு என்ன என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலை, கொள்ளை வழக்கு குறித்தான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்து அனுப்பக்கூடிய சம்மன்கள் அனைத்தும் முக்கிய நபர்களை நோக்கி இருக்கும் எனவும், விரைவாக விசாரணை அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: