இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை தமிழ்நாட்டு தொழிற்சாலைகளில் 42% பெண்கள் பணியாற்றுகின்றனர்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.1.12 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில், தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய மாற்றத்தை, வளர்ச்சியை பெற்றுள்ள மாநிலமாக மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களில் 42 சதவீதம் பெண்களாக இருக்கின்றனர். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. அந்த அளவிற்கு பெண்கள் திறமை பெற்று இருக்கிறார்கள்.

இந்த முறை நிதிநிலை அறிக்கையில் பெண்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதற்காக அடுத்து வரக்கூடிய ஓராண்டு காலத்தில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான திட்டத்தை அறிவித்திருக்கிறோம். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, பெண்களுக்கு சம சொத்துரிமை வழங்கினார். அது இன்று வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சொத்து பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பதற்கான திட்டத்தை தற்போது முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு காரணம் பெண்கள் பொருளாதாரத்தில் வளம்பெற வேண்டும் என்பதற்காகத்தான். இதுபோன்ற உணர்வோடுதான் நம்முடைய அரசு பல திட்டங்களை தீட்டி வருகிறது. இவ்வாறு கூறினார்.

The post இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை தமிழ்நாட்டு தொழிற்சாலைகளில் 42% பெண்கள் பணியாற்றுகின்றனர்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: