புதுவை அமைச்சர் ராஜினாமா கோரி சபாநாயகர் இருக்கை முன் போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

புதுச்சேரி: புதுவை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் கைது விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டசபையில் சபாநாயகர் இருக்கை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி தலைவர் சிவாவை, சபை காவலர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டுநாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா எழுந்து, இந்தியா முழுவதும் புதுச்சேரிக்கு பெரிய தலை குனிவு ஏற்பட்டுள்ளது. தலைமை செயலருக்கு நிகரான பொறுப்பில் உள்ள தலைமைப்பொறியாளர் ரூ.7 கோடி பணிக்கு கமிஷன் என்ற அடிப்படையில் ரூ. 2 லட்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாதத்தில் புதுச்சேரி அதிர்ந்து போயுள்ளது. இதற்கு பொறுப்பேற்று துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆளும் அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர் குறித்து சட்டசபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும். சபாநாயகர் செல்வம்: கேள்வி நேரம் முடிந்து விவாதிக்கலாம், வாய்ப்பு தருகிறேன். இருக்கையில் அமருங்கள். எதிர்க்கட்சி தலைவர் சிவா: இந்த அரசு இந்த பிரச்னையில் என்ன செய்யப்போகிறது. தலைமைப்பொறியாளர் அலுவலகமே பூட்டப்பட்டு யாரும் செல்லவில்லை. எங்கள் கேள்விகளுக்கு எப்படி பதில் தருவீர்கள். எனவே மிக முக்கியமான பிரச்னை, அவையை ஒத்தி வையுங்கள். சபாநாயகர் செல்வம்: நாடாளுமன்ற, சட்டமன்ற விதிகளின் படி கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விவாதிக்க முடியாது. உங்களுக்கு நேரம் ஒதுக்கப்படும், அப்போது பேசுங்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, சம்பத், அனிபால் கென்னடி, செந்தில்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆகியோர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சபாநாயகர், சபை காவலர்களை அழைத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அவர்கள் எழுந்திருக்கவில்லை, இதனால் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சபைக்காவலர்கள், எதிர்க்கட்சி தலைவர் சிவாவை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வெளியேற்றினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தாமதமாக வந்த நாஜிம், நாக.தியாகராஜன் ஆகியோர் இப்பிரச்னையை மீண்டும் எழுப்பினர். தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் நாஜிம், நாக. தியாகராஜன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

The post புதுவை அமைச்சர் ராஜினாமா கோரி சபாநாயகர் இருக்கை முன் போராட்டம்: எதிர்க்கட்சி தலைவர் குண்டுக்கட்டாக வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: