பல்லடம் : பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் பறவைகளின் எச்சத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊரில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரத்தில் தினமும் இரவு நேரங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொக்குகள் வந்து தங்குகிறது. அவ்வாறு இரவு நேரங்களில் மரக்கிளைகளில் தங்கும் கொக்குகள் எச்சங்களை அந்தப் பகுதி முழுவதும் போடுவதால் எங்கு பார்த்தாலும் எச்சங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.
மேலும், அதனுடைய இறகுகளும் காற்றில் பறந்து எங்கு பார்த்தாலும் கிடக்கிறது. மேலும், இந்த ஆலமரத்தின் அருகிலேயே அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால் அங்கும் அதனுடைய இறகுகள் மற்றும் எச்சங்கள் சிதறி கிடக்கிறது. பார்ப்பதற்கு ஒரு பெரிய அடர்ந்த காட்டுப் பகுதியில் இருப்பது போல் காணப்படுகிறது.
மேலும், இந்த எச்சங்கள் துர்நாற்றம் வீசுவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு சுத்தம் செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பறவைகளின் எச்சத்தால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.