வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் அழித்து வரக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இது அமெரிக்கா போன்ற வெளிநாட்டை தாயகமாகக் கொண்டது.
இது பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த 75 ஆண்டுகளில் ஏரி, குளம், குட்டை என நீர்நிலைகளில் வளர்ந்து இன்று தமிழகம் முழுவதும் ஆக்கிரமித்து விட்டது. இந்த சீமை கருவேல மரத்தை அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான தாவரமாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது, கேரளாவில் அதை வேரோடு பிடுங்கி எறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டுக்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் விவசாய நிலங்களை வீணாக்கி கொண்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த அரசு முனைப்புடன் ஈடுபட்டு வந்தாலும் அவை முழுமையாக அழிக்க முடியவில்லை என்பதே உண்மை.
எந்த ஒரு கால கட்டத்திலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி எப்போதும் செழிப்பாகவே இருந்து வருகிறது. இவை ஆழமாக வேர் விட்டு உறுதியான பக்க வேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழை நீரை உறிஞ்சி நிலத்தடிக்குள் தண்ணீர் செல்வதை தடை செய்கிறது. இவை மற்ற மரங்களை போல் ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லை.
விவசாய நிலங்களின் எதிரியான இந்த சீம கருவேல மரங்களை நீர்வளத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை ஆகிய மூன்று துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து ஏரி, குளம், குட்டைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஒடுகத்தூர் பகுதியில் ஏரியில் வளர்ந்துள்ள நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள் appeared first on Dinakaran.