இதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அதன் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 14ம் தேதி அன்று தமிழக பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தகட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ் தெரிவித்திருந்தார்.
இதன்படி ஜாக்டோ- ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் டாடாபாத் சிவானந்தா காலனியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல திருநெல்வேலி, சேலம், திருச்சி, நாமக்கல், மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரத்திலும் ஜாக்டோ -ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
The post 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் நடந்தது appeared first on Dinakaran.