நாளைய கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்.. நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை : நாளைய கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்.. நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “தொகுதி மறுசீரமைப்புதான் தற்போது பேசும்பொருளாக உள்ளது. 2026-ம் ஆண்டில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடந்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. அவ்வாறு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகள் எண்ணிக்கை குறையும். தொகுதிகள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று உணர்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பியுள்ளோம். இது எம்பி.க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை.

பா.ஜ.க. தவிர அனைத்து கட்சிகளும் சேர்ந்து கூட்டத்தை நடத்தியது தமிழ்நாடு அரசு. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட 7 மாநில முதல்வர்கள், அம்மாநில கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதினேன். மாநில முதல்வர்களுடன் நானே தொலைபேசியில் பேசினேன். இதைத் தொடர்ந்து முதல்கட்ட ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடக்க இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதித்தால் நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கக் கூடாது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டால் ஜனநாயகத்துக்கான மதிப்பே இருக்காது. எம்.பி. தொகுதிகள் குறைந்தால் நாடாளுமன்றத்தில் நமது குரல் நசுக்கப்படும்; நமது உரிமைகளை நிலைநாட்ட முடியாது.

எம்.பி. தொகுதிகளை குறைப்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை அவமதிக்கும் செயல். மக்கள் தொகையை கட்டுபடுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பங்களித்துள்ளன. நாட்டின் வளர்ச்சியில் பங்களித்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்க கூடாது. நாளை நடைபெறும் கூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்படும்; அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நமது நியாயமான கோரிக்கை நிச்சயம் வெற்றியடையும்; நமது முன்னெடுப்புகள் இந்தியாவை காக்கும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நாளைய கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்.. நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: