கண்ணில் ஏற்படும் காயங்களுக்கு பியூப்பிலோபிளாஸ்டி சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை: அகர்வால் கண் மருத்துவமனை இயக்குனர் தகவல்

சென்னை: கண்ணில் ஏற்படும் காயங்களுக்கு கண் மாற்று அறுவை சிகிச்சையின்றி, ஊசித்துளை முறையான பியூப்பிலோபிளாஸ்டி சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை கிடைக்குக்கூடும் என அகர்வால் கண் மருத்துவமனை இயக்குனர் அமர் அகர்வால் கூறினார். சென்னை டிடிகே சாலை அகர்வால் கண் மருத்துவமனையில், 67 வயது முதியவர் ஒருவருக்கு சேதமடைந்த கருவிழி படலத்திற்கு ஊசித் துளை பியூப்பிலோபிளாஸ்டி என்ற சிகிச்சை முறை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் நிருபர்களை சந்தித்தனர். அப்போது டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது:

கண் கார்னியா பகுதியில் அடிப்பட்டு காயம் உள்ளதென்றால் பொதுவாக கண்ணை மாற்ற வேண்டி இருக்கும். ஆனால், பின் ஓல் (Pin Hole) சர்ஜரி என்ற மருத்துவ முறையில், பார்வை பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கண்ணை மாற்ற வேண்டிய சிகிச்சையை தவிர்க்கலாம். இந்த சிகிச்சையை மேற்கொள்ள மொத்தமாக 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். கண்ணின் உள்ளே ஐரிஸ் பகுதியில் தையல் போட்டுவிட்டால் போதும். வாழ்நாள் முழுவதும் பிரச்சினை இல்லாமல் இருக்கலாம்.

67 வயதுடைய மணி என்பவர் பேட்மின்டன் விளையாடும் போது கண்ணில் அடிப்பட்டதாகவும் முழுமையான கருவிழி சேதத்துடன் வலது கண்ணில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருந்த இவருக்கு ஊசித்துளை பியூப்பிலோபிளாஸ்டி என்ற புதிய சிகிச்சை முறை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மருத்துவர் சௌந்தரி பேசுகையில், சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது ஒரு சிலருக்கு கண்ணில் தழும்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

அவர்களுக்கு இந்த பியூப்பிலோபிளாஸ்டி சிகிச்சை முறை உதவும் என்றார். அதைத் தொடர்ந்து பேசிய தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் அஸ்வின் அகர்வால், குழந்தைகளுக்கு பென்சில், காம்பஸ் மூலம் ஏற்படும் விபத்துகள் அதிகம். அடிபட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். ஐரிஸ், கருவிழி, லென்ஸ் ஆகிய மூன்று பிரச்சனைகளுக்கும் ஒரே சிகிச்சையில் தீர்வு கிடைக்கும் என்றார்.

The post கண்ணில் ஏற்படும் காயங்களுக்கு பியூப்பிலோபிளாஸ்டி சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை: அகர்வால் கண் மருத்துவமனை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: