சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி அவர்கள் : சூலூர் தொகுதி, செஞ்சேரி மலையடிபாளையம் அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக திருமண மண்டபம் கட்ட அரசு ஆவனசெய்யுமா? அமைச்சர் அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்கள் கோரிய மந்திரகிரி திருக்கோயிலானது ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கும் திருக்கோயில். மலை அடிவாரத்தில் அந்த திருக்கோயிலுக்கு சொந்தமான இடம் இருக்கின்றது. இங்கு உபயதாரர் வாயிலாக திருமண மண்டபம் கட்டுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு உபயதாரர் யாரும் முன் வராததாலும், கேள்வி கேட்ட சட்டமன்ற உறுப்பினரும் அதற்குண்டான முயற்சி எடுக்காததாலும் முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டுவதற்குண்டான பணிகள் மூன்று மாதங்களில் துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி அவர்கள் : பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 2024 மார்ச் 24ஆம் தேதி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த செஞ்சேரிமலை அருள்மிகு வேலாயுதகூவாமி திருக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்த முன்னாள் முதலமைச்சர் எங்கள் பொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி அவர்களையும், கொறடா அவர்களையும், துணைத் தலைவர் அவர்களையும் வணங்கி கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செஞ்சேரிமலை, அருள்மிகு மந்திரகிரி வேலாயுதசுவாமி திருக்கோயிலை சுற்றியுள்ள 72 கிராம மக்கள் மட்டுமின்றி அனைத்து பகுதியிலும் உள்ள மக்கள் வரக்கூடிய ஒரு அருமையான திருக்கோயிலாகும்.
ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சத்குரு சம்கார பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கிறார்கள். மேலும் கிருத்திகை, கந்த சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி, சூரசம்ஹாரம் போன்ற நாட்களில் அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் இத்திருக்கோயிலில் நடைபெறுகிறது. தை தேரோட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்கின்ற திருக்கோயிலாகும். அதிகமாக அன்னதானங்கள் நடக்கின்ற காரணத்தினாலும், திருமண மண்டபம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். அதற்கு நிதி இல்லை என்ற அமைச்சர் அவர்கள் கூறுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் கொடுப்பதற்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதேபோல இப்போது அதற்கு புதிதாக நிர்வாகிகள் நியமித்திருக்கிறீர்கள்.
அந்த நிர்வாகிகளும் முயற்சி செய்தால் கண்டிப்பாக அந்த திருமணம் மண்டபம் கட்டக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எத்தனையோ திருக்கோயிலுக்கு திருப்பணி செய்கின்ற அமைச்சர் அவர்கள் திருக்கோயிலின் அருளை பெறுவதற்கு அவர் திருமண மண்டத்தையும் ராஜகோபுரம் அமைத்துக் கொடுப்பதற்கும் முன் வருவாரா என்பதை கேட்டு அமைகிறேன். அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, உறுப்பினர் அவர்களுக்கு ஏற்கனவே இந்த மண்டபப் பணி மூன்று மாதங்களில் துவங்கப்படும் என்ற உறுதி அளித்திருக்கின்றோம். சட்டப்பேரவை உறுப்பினர் நிதி இது போன்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆகவே பொதுநலநிதி அல்லது பெரிய திருக்கோயில் இருந்து கடனாக பெற்று நிச்சயம் அந்த மண்டபத்தின் உடைய பணிகள் மூன்று மாதங்களில் துவங்கப்படும் என்பதை உறுதியாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, மூன்று மாதத்தில் துவங்கப்படும் என்று கூறிய அமைச்சர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை கூறி, சூலூர், அருள்மிகு வைத்தீஸ்வரன் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோயில் திருப்பணியும், இருகூரில் அமைந்துள்ள அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் திருப்பணியும் கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்துவதற்கு அமைச்சர் முன் வருவாரா என்று கூறி அதற்கு தன்னுடைய சொந்த மாத சம்பளத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும், அதை திருப்பணிக்கு கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, வைத்தியநாத சுவாமி திருக்கோயிலை பற்றி ஒரு சிறப்பு உண்டு. அந்த திருக்கோயிலின் கல்யாண நந்திக்கு எண்ணெய் சாற்றி அந்த பிரசாதத்தை உட்கொண்டால் திருமணம் போன்ற காரியங்கள் நடைபெறும் என்றும், மூலவருக்கு எண்ணெய் சாற்றி உட்கொண்டால் நோய் தீர்க்கின்ற மாமருந்தாகவும் பக்தர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த திருக்கோயிலின் திருப்பணியானது 90 சதவீதம் அளவிற்கு நிறைவு பெற்றிருக்கின்றது. இன்னும் 10 சதவீத பணிகள் மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, நாள் குறிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும். அமைச்சர் என்ற முறையில் நானும் கலந்து கொள்கிறேன். உறுப்பினர் அவர்களும் அந்த குடமுழுக்கில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கபாண்டியன் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, இராஜபாளையம் தொகுதி தேவதானத்தில் அமைந்துள்ள அருள்மிகு தவம்பெற்ற நாயகி அம்மன் திருக்கோயிலில் தெப்பம் சீரமைக்கும் பணிகளுக்கு 5 கோடி 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிந்து முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி மூலமாக பயன்பாட்டு கொண்டு வந்த பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாரம் மாசிமகம் அன்று தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. இதற்கு உறுதுணையாக இருந்த முதலமைச்சர் அவர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும், எங்கள் மாவட்டத்தின் அமைச்சர் அவர்களுக்கும், பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டு, மேலும் நிலுவையில் உள்ள பிளேவர் சாலை அமைத்தல், மின்விளக்கு அமைத்தல் இவற்றிற்கெல்லாம் நிதி ஒதுக்கீடு செய்திட அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் ஆறுபடை முருகனாக விளங்கிக் கொண்டிருப்பவர், சிவனுக்காக இந்த நிதியை ஒதுக்குவாரா என்பதை அறிய விரும்புகின்றேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, சித்தமெல்லாம் சிவமயம் என்ற வார்த்தைக்கு இணங்க இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் 557 சிவன் திருக்கோயில்களுக்கு மாத்திரம் குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கின்றது. நம்முடைய உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் பட்டியலை அளித்தாதென்றால் அதற்கும் ஆவணம் செய்து அந்த பணிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றி தருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, கோவை வடக்கு தொகுதியில் இந்து அறநிலையத்துறை சார்பில் மகளிர் தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க முன்வருமா? போதுமான இட வசதியும் உள்ளது. போதுமான நிதியும் மருதமலை தேவஸ்தான போர்டில் இருந்து கிடைக்கப்பெறும். ஆகையால் இந்த பாலிடெக்னிக் கல்லூரியை அமைச்சர் தயவு கூர்ந்து அதை கட்டித் தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். எம்.எல்.ஏ. சட்டமன்ற நிதியிலிருந்து நிதி தர வேண்டும் என்றால் தருவதற்கு ரெடியா இருக்கிறேன். கட்டி தர முன் வருவாரா என அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் அவர்கள் : பேரவை தலைவர் அவர்களே, ஏற்கனவே பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் ஒரு தொழில்நுட்ப கல்லூரி 668 மாணவர்களுடன் சிறப்போடு நடத்தப்பட்டு வருகின்றது. உறுப்பினர் அவர்கள் கோரிய அந்த திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் மேல்நிலைப் பள்ளியில் 900 மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். நேரடியாக மூன்று முறை கள ஆய்வு செய்து அந்த பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிடங்களையும் சுமார் ரூ.1.58 கோடி செலவில் கூடுதல் கட்டிடங்களையும் கட்டுகின்ற பணி ஏறக்குறைய 70% நிறைவடைந்து இருக்கின்றது. நீங்கள் கூறிய இந்த தொழில்நுட்ப கல்லூரியை பொறுத்த அளவில் தொடர் செலவு, தொடரா செலவு என்று இரு வகையாக பிரிக்கப்பட வேண்டியுள்ளது.
தொடரா செலவு சுமார் 14 கோடி ரூபாய் வருகின்றது. நீங்கள் அந்த கேள்வியை கேட்டவுடன் குறிப்புகளை கேட்டேன். தொடர் செலவு என்று பார்த்தால் ஆண்டிற்கு இரண்டரை கோடி ரூபாய் வருகின்றது. மருதமலை திருக்கோயில் ஏற்கனவே 37 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வரைவு பணிகளை எடுத்திருக்கின்றோம். உலகமே அதிசயிக்கின்ற வகையில் அங்கே முருகனுக்கு ஒரு பிரம்மாண்ட சிலை அமைக்க தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட்டிருக்கின்றார். இது போன்ற பணிகளுக்கு நிதி ஆதாரம் தேவைப்படுவதால், நீங்கள் வைத்த கோரிக்கையை மறுக்க மாட்டோம். வாய்ப்பு இருந்தால் கள ஆய்வு செய்து முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயமாக நிறைவேற்றுவதற்குண்டான சாத்திய கூறுகளை ஆராய்ந்து முயற்சிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
The post வினா – விடை நேரத்தின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு அமைச்சர் சேகர்பாபுவின் பதில்! appeared first on Dinakaran.