திருப்போரூர்: திருப்போரூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடையில் அச்சிடப்பட்டிருந்த தொல்.திருமாவளவன் போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் விசிகவினர் புகார் அளித்தனர். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கீழூர் ஊராட்சியில் தர்மாபுரி என்ற கிராமம் உள்ளது. இந்த, கிராம மக்களின் கோரிக்கையின்படி, திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து புதிய நிழற்குடை அமைக்க நிதி ஒதுக்கி, இப்பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு அதி நவீன நிழற்குடை அமைக்கப்பட்டது.
இவ்வாறு, புதியதாக அமைக்கப்பட்ட நிழற்குடையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாலாஜி எம்எல்ஏ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. விரைவில், இந்த நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நிழற்குடையில் இருந்த திருமாவளவன் படத்தை மட்டும் சிலர் கிழித்திருந்தனர். இதனையறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதியில் திரண்டனர். பின்னர், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில் திருப்போரூர் போலீசில் புகார் அளித்தனர். இப்புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
The post பேருந்து நிழற்குடையில் இருந்த திருமாவளவன் போஸ்டர் கிழிப்பு: போலீசில், விசிகவினர் புகார் appeared first on Dinakaran.
