×

ரூ.120 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரப்படும்: ஆய்வுக்குப்பின் அமைச்சர் சேகர்பாபு தகவல்

செங்கல்பட்டு, ஜன.8: ரூ.120 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு நகரத்தையொட்டி ஏற்கனவே அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்துகள் நிற்பதற்கோ, உள்ளே பேருந்துகள் வந்து செல்வதற்கோ போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இப்பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.

அப்பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் நெரிசல் இன்றி உள்ளே வந்து செல்லும் வகையிலும், ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிற்கும் வகையிலும், புதிதாக ரூ.120 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், தரை மற்றும் முதல் தளங்களில் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் வகையில் ஏராளமான கடைகள், நவீன கழிவறை, காத்திருப்பு அறைகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், இங்கு பேருந்துகளுக்கான பணிமனை, பெட்ரோல் மற்றும் டீசல் பங்க், ஓட்டுநர், நடத்துனர் உள்பட போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வறைகள் மற்றும் டாக்சி புக் பண்ணும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இப்புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்று, வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டில் நடந்து வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேற்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அப்பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அப்பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சினேகா, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் ஆப்பூர் சந்தானம், கே.பி.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய பணிகள் முழுமை பெற்றதும், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Tags : Chengalpattu ,Minister ,Sekarbabu ,
× RELATED அரசு பஸ் மீது பைக் மோதி பிளஸ் 2 மாணவன் பலி