மாமல்லபுரம்: தேசிய பாதுகாப்பு கல்லூரியை சேர்ந்த ஒன்றிய அதிகாரிகள், மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புது டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியை சேர்ந்த ஆயுதப்படை அதிகாரிகள், சிவில் சர்வீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் என 17 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா தொழில்களில் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றத்தை உள்ளடக்கிய மாநிலத்துடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்கள், பல்வேறு துறைகளில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னை வந்தனர்.
இந்நிலையில், 17 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று மதியம் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்போடு மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு வாயில் வந்தனர். தொடர்ந்து, அவர்கள் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறையை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, தமிழ்நாடு அரசு சுற்றுலா வழிகாட்டியிடம் புராதன சின்னங்கள் எந்த காலத்தில், எந்த மன்னரால் செதுக்கப்பட்டது. கடற்கரை கோயில் உப்பு காற்றினால் பாதிக்காத வகையில், தொல்லியல் துறை நிர்வாகம் எப்படி பராமரிக்கின்றனர் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.
The post மாமல்லபுரம் புராதன சின்னங்களை தேசிய பாதுகாப்பு கல்லூரி அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.
