கோரக்கர் தோற்றுவித்த மூலிகைகள்

கோரக்கருக்கு குருவான மச்சேந்திர முனிவர்

பிள்ளைப் பேறு இல்லாத பெண்மணிக்கு மச்சேந்திர முனிவர் சிவன் விபூதியை தந்துவிட்டு செல்கிறார். கேட்பார் பேச்சுக் கேட்டு முனிவரை தவறாக எண்ணிய பெண்மணி கோ சாலையில் இருக்கின்ற சாம்பலோடு தெய்வீக பிரசாத விபூதியை கொட்டிவிடுகிறாள். 10 ஆண்டுகள் கழித்து மச்சேந்திர முனி அந்த பெண்மணியின் இல்லத்தில் வந்து ஆவலோடு, “உன் பாலகன் எப்படி இருக்கிறான்? எனக்கு காண்பி’’ என்று கேட்கிறார். “நான் பின்புறம் உள்ள கோசாலையில் சாம்பலில் விபூதியை போட்டுவிட்டேன்’’ என்று அவள் கூறுகிறாள். சினம் கொண்ட முனிவர்; அவ்விடம் சென்று “கோரக்கா எழுந்து வா” என்று அழைத்தார். சாம்பலில் இருந்து பத்து வயது பாலகனாக வெளிப்பட்டவர், கோரக்கர்.

மென்மையும் அமைதியும் உடையவராக திகழ்ந்தார். அக்குழந்தையை அழைத்துக் கொண்டு மச்சமுனிவர் மலைகள், காடுகள், நகரங்கள் என்று பயணம் மேற்கொண்டார்.
குருமிஞ்சும் சீடனாக விளங்கினார், கோரக்கர். மூலிகைகளின் தன்மைகளை அறிந்து கொள்ள விரும்பினார். காட்டின் வழியாக கோரக்கரும் குருவும் நெடிய பயணமாக நடந்து சென்றனர். களைப்பு மிகுதியால் ஒரு மரத்தின் நிழலில் மச்சமுனிவர் அமர்ந்தார்.

“கோரக்கா, எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது, காதடைக்கிறது. அருகே கிராமங்கள் இருப்பது போல் தோன்றுகிறது. நீ அந்த கிராமத்திற்குச் சென்று பிட்சைக் கேட்டு வாங்கி வா” என்று அனுப்புகின்றார். ஒரு வீட்டின் முன்னால் நின்று “பவதி பிக்ஷாம் தேஹி’’ (தாயே பிட்சை போடுங்கள்) என்று கேட்டதும், அந்த இல்லத்தின் பெண்மணி, “இன்று உணவு எதுவும் இல்லை. ஆனால், வடை ஒன்று மட்டும் இருக்கிறது தருகிறேன்” என்று கொடுத்தாள். வடையை கொண்டு வந்து தன் குருவிடம் கொடுத்தார். சாப்பிட்ட, மச்சமுனி; “ஆஹா.. வடையின் சுவை எவ்வளவு ருசியாக இருக்கிறது என்று அப்பெண்ணையும், உணவையும் புகழ்ந்தார். மறுநாள் அக்கிராமத்தை நோக்கி இருவரும் பயணித்தனர்.

“நேற்று கொடுத்த பெண்ணுடைய இல்லத்திற்குச் சென்று, வடை கொஞ்சம் கேட்டு வாங்கி வா” என்று கோரக்கரை அனுப்பினார். அதே பெண்மணி வீட்டில் நின்று, மீண்டும் “பிக்ஷாம் தேஹி” என்று கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, தயிர் அன்னம் கொண்டு வந்து தருகிறாள். “அம்மா, என் குருநாதருக்கு நேற்று நீங்கள் கொடுத்த வடைபிடித்துபோய்விட்டது. ஆகையால், மீண்டும் அதுபோல் இன்றும் வடை கொடுங்கள்” என்று கேட்டார்.

சினம் கொண்டவள் வெகுண்டு;
“எடுப்பது பிட்சை விடுப்பது ஆணையோ” என அதிகார தோரணையில் வெடித்தாள். “தாயே என் குருநாதர் ஆசைப்பட்டு கேட்டார் தாருங்களேன்”
“ஆசான் ஆசைப்பட்டார் என்றால் வடையை நீ செய்து கொடுக்க வேண்டும். என்னால், எப்படி சுட்டுத் தர இயலும்?” என்றாள்.“என் குரு ஆசைப் பட்டுவிட்டார் அம்மா. துறவி ஆகிய நான் எவ்வாறு சுட்டுத் தருவேன்? அம்மா நீங்கள் சுட்டுத் தாருங்கள்” என்று மிகவும் பணிவுடன் கேட்டார். அந்தப் பணிவும், குரு மீது கொண்ட பக்தியும் அவளை மிகவும் ஆச்சரியப்பட செய்தது. இருப்பினும் அவரை சோதித்தறிய எண்ணினாள்.

“உன் குருவுக்காக நீ எதுவும் செய்வாயா?”
“ஆமாம் செய்வேன்”
“வடைக்கு எடையாக உன்னுடைய கண்ணை எனக்கு கொடுப்பாயா?” என்று கேட்டு, அவளின் வாயை மூடவில்லை. அருகில் இருந்த வடையை எடுக்கும் கம்பியை எடுத்து கண்ணை குத்தி அந்த விழிகளை எடுத்துக் கொடுத்து; “அன்னையே வடைக்கு எடை கண் கொடுத்துவிட்டேன்’’ என்று கூறியதும், பெண்மணியின் கண்களில் குளமாக நீர் நிரம்பி;
“அப்பா நீ தெய்வீகக் குழந்தை உன்னுடைய பக்தி எத்தகையது என்பதை அறிந்து கொண்டேன். என்னை மன்னித்து‌ விடப்பா! இதோ நொடியில், நேற்று சுட்ட வடையைவிட நெய்யிலே சுட்டுத் தருகிறேன்” என்று அப்பெண் வடைகளை சுட்டு தந்தாள். அதை கொண்டு சென்று குருவிடம் கொடுத்தார்.

குரு ருசித்துப் பார்த்து “ஆஹா எவ்வளவு அற்புதமாக சுவையாக இருக்கிறது என்ன ருசி எனப் பாராட்டினார்” உள் அன்போடு செய்ததால், நேற்று சுட்ட வடையைவிட இன்று பிரமாதம் என வாழ்த்தினார். அதன் பிறகு, கோரக்கர் கண்ணில் ரத்தம் வழிந்தோடுவதைக் கண்டு, பதற்றத்துடன்;“ஏன் ரத்தம் வழிந்தோடுகிறது?’’ என கேட்கின்றார். நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் குருவிடத்தில் கூறினார்.“எனக்கு வடை வேண்டும் என்பதற்காக கண்ணையே கொடுத்தாயா?” என்றுகூறி சிவனிடம் வேண்டி இழந்த கண்ணை மீண்டும் தம்‌ தவஆற்றலால் பெறச் செய்தார்.

முனிவருக்கு அரசி கொடுத்த வெகுமதி

மச்சமுனியும், கோரக்கரரும் மலையாள நாட்டிற்குச் சென்றனர். அந்த நாட்டை ஆண்ட அரசி, தவவலிமை பெற்ற முனிவரையும் சிவன் அருளால் பிறந்த கோரக்கரையும் சந்தித்து, அவர்களோடு உரையாட வேண்டும் என எண்ணினாள். தன் அமைச்சரை அனுப்பி இருவரையும் அரண்மனைக்கு அழைத்து வருமாறு கட்டளையிட்டார். இருவரும் அரண்மனைக்கு சென்றனர். உள்ளம் மகிழ்ந்த அரசி, அவர்களை வரவேற்று சிம்மாசனத்திற்கு இணையான சரியாசனம் கொடுத்து உபசரித்தாள். பிரபஞ்ச ரகசியங்களைப்பற்றி நீண்ட உரையாடல் நடந்தது. தன்னுடைய நாட்டு மக்களும் செழிப்பாக இருக்க ஆசீர்வதிக்க வேண்டுமென்றாள்.

அவரும் ஆசீர்வதித்தார். இருவரும் விடை பெறும் பொழுது, ஒரு துணிப்பை அவரிடம் கொடுத்து, என் அன்பு காணிக்கையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் மறுக்கக் கூடாது என அன்பு கட்டளையிட்டாள். அதை திறந்து பார்த்ததும் அதில் உள்ளே தங்க கட்டிகள் இருக்கின்றன. மச்சமுனி சிறந்த முனிவராக இருந்தபோதிலும், அந்த தங்க கட்டிகளை பார்த்தவுடன், சிறிய சபலம் ஏற்பட்டு, ஆசை தோன்றுகிறது. ஆகையால், மச்சமுனி, அரசி கொடுத்த தங்க காணிக்கைகளை பெற்றுக்கொண்டு சீடருடன் காட்டுவழியே நடந்து செல்கிறார்.

துறவிக்கு எதற்கு பரிசு?

ஒரு இடத்தில், அந்த தங்க காணிக்கைகளை சுமக்க முடியாது திணறுகிறார்.“இந்த தங்கப் பையை என்னால் சுமக்க முடியவில்லை மிக கனமாக இருக்கிறது. ஆகையால் சற்று நீ இதனை சுமந்து வா…” என தன் சீடரிடத்தில் கொடுக்கிறார். அதை பெற்றுக் கொண்டார், கோரக்கர். “திருடர்களின் நடமாட்டம் இங்கு இருக்குமோ என்னவோ, தெரியவில்லை. ஆகையால் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும்” என்று அடிக்கடி குரு, சீடனை எச்சரித்தவாறே பயணித்து வந்தார்.

ஒரு கட்டத்தில், சீடனான கோரக்கரும் அதனை சுமக்க முடியாது தவித்தார். அதனால், கோரக்கருக்கு சினம் ஏறியது. முற்றும் துறந்த துறவிக்கு எதற்கு தங்க கட்டிகள்? இந்த தங்கக் கட்டிகளை தூக்கிக்கொண்டு வருவதனால், மனதிற்குள் திருடர்கள் பயம் வேறு ஏற்படுகிறது என்று கருதி, குரு அசரும் நேரத்தில், தங்கக் கட்டிகளைத் தூர வீசி எறிந்துவிட்டு, தங்கத்திற்கு பதிலாக, எடை குறைவாக இருக்கும் இரண்டு கருங்கற்களை பைக்குள் வைத்து தூக்கிக் கொண்டு வந்தார். ஒரு இடத்தில், மச்சமுனி காணிக்கைப் பையை வாங்கிப் பார்க்கிறார். அதில், தங்கக்கட்டிக்குப் பதில் கருங்கல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியுடன்; “எங்கே தங்கக் கட்டிகள்?” என்று கேட்டார்.

தங்கமாக மாறிய மலை

“துறவிக்கு எதற்கு தங்கக் கட்டிகள் குருவே? அதனால், அவற்றை எடுத்து நான் வீசி எறிந்துவிட்டேன். நாம் துறவிகள். ஆகையால் மண், பெண், பொன் மீது ஆசை இருக்கக்கூடாது என்று தாங்கள் அறியாததா குருவே? அப்படி இருக்கும் பொழுது, இதை எதற்காகக் கொண்டு வந்தீர்கள்’’ என்று கேட்டார்.“அரசி, விருப்பப்பட்டு கொடுத்ததை மறுக்க முடியாமல் கொண்டு வந்தேன்” என்று சமாளித்தார். மேலும், “உனக்கு பொன் மீது ஆசை இல்லையோ? சும்மா நடிக்காதே? உனக்கும் ஆசைகள் இருக்கும் அல்லவா?’’ என குரு கோபத்துடன் கேட்டார். குருவை மிஞ்சும் சிஷ்யனோ, எதிரே ஒரு பெரிய மலையை உருவாக்கினார். உடனே அம்மலை தங்கமாக மாறியது. “உங்களுக்கு எவ்வளவு தங்கம் வேண்டுமோ வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, மச்சமுனியை விட்டு விலகி, தனியாக பிரிந்து சென்றுவிட்டார்.

பிரம்மரிஷியை காணுதல்

அதன் பின் பல இடங்களில் சுற்றித் திரிந்து, பிரம்மரிஷியிடத்தில் சீடராக சேர்ந்தார், கோரக்கர். இருவரும் நல்ல நட்புடன் பழகினர்.“நாம் இருவரும் இணைந்து யாகமும், தவமும் செய்வோம். அதன் மூலம் நாம் இறவாமை என்னும் நிலையை அடையலாம். மேலும், அபூர்வமான அஷ்டமா சித்தி, காய சித்தி ஆகியவைகளும் வரமாக பெறலாம். முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை இயக்கும் ஆற்றலையும் பெற இயலும். என கோரக்கர், பிரம்மரிஷியிடத்தில் தெரிவிக்கிறார். மேலும், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றலை எவ்வாறு பெறலாம் எனவும் இருவரும் சிந்தித்தனர்.

பிறகு, இருவரும் கடுமையாக தவம் செய்தனர். பின்பு உக்ரமான யாகம் செய்ய இருவரும் தீர்மானித்து, யாகம் செய்தனர். அதன் பலனாக, இறைவன் தோன்றி, அவர்களுக்கு ஆசி வழங்க, நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற வேளையில், யாகத்தைத் தடை செய்வதற்காக தீயிலிருந்து இருள் மாயை, மருள் மாயை என்ற இரு பெண்கள் தோன்றினார்கள்.அவர்களை பார்ப்பதற்கு தேவலோக கன்னியரை ஒத்த பேரழகும், ஆண்களை எளிதில் மயக்கக் கூடிய உருவ அமைப்பும் பெற்றிருந்தனர். அழகிய மங்கையர், தீயில் இருந்து உதித்து எழுந்த நொடியில், விண்ணுலகத்தில் இருந்து காட்டில் சஞ்சாரம் செய்த அக்னியும், வாயுவும் இரு பெண்களைக் கண்டனர். இருவரும் பெண்கள் மீது மோகித்தனர். இதனை கவனித்த கோரக்கர், அந்த மாயப் பெண்களை செடிகளாக மாறும்படி சபித்தனர்.

மாயப் பெண்களை சபித்தல்

“ஏய்! பெண்ணே… நீ புகையிலிருந்து தோன்றியதனால், புகையிலை செடியாக வளர்வாய்” என்று பிரம்மரிஷி, இருள் மாயை என்ற பெண்ணை சபித்தார்.“கஞ்சா செடியாக, நீ வளர்வாய்” என்று கோரக்கர், மருள் மாயை என்ற பெண்ணை சபித்தார். இதனால் மனம் வருந்திய மாயப் பெண்கள், தங்களை மன்னித்து அருள்புரியும் படி வேண்டினார்கள். மனமிரங்கிய பிரம்மரிஷியும், கோரக்கரும்;

“சரி.. ஒன்று செய்கின்றோம். நீங்கள் மாறவிருக்கும் செடிகள், தீமைகளை மட்டும் செய்யாது, பல நன்மைகளையும் பிற்காலத்தில் இருக்கும்’’ என்றும் கூறினார்கள். (இன்று மருத்துவ உலகில், இந்த இருசெடிகளைக் கொண்டு பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன) அக்கணமே தீயில் தோன்றிய தேவ பெண்கள், பிரம்மரிஷி மற்றும் கோரக்கர்களின் கட்டளைப்படி வளர்கின்றனர்.

கோரக்கர் எழுதிய நூல்கள்

கோரக்கர் மலைவாகடம் (கோரக்கரின் மலை மருந்துகள்), மலைவாகடம், கோரக்கர் வைப்பு, காலமேகம், மராலி வரதம், நிலாயோடுகம், கோரக்கர் மூலிகை தண்டகம், ஆகியவை மிக முக்கிய நூலாகும். மேலும், எதிர்கால நிகழ்வுகளை அறிவதற்காக கோரக்கர், “சந்திரரேகை’’ என்கின்ற நூலையும் எழுதியிருக்கிறார்.
கோரக்கருக்கு பல இடங்களில் கோயில்கள் உண்டு. அதில் முக்கியமானவை;

ஆனைமலை
பொதிகை மலை
நாத்திடல்
வடக்குப் பொய்கை நல்லூர்
சதுரகிரி
பத்மாசுரன் மலை
கோராக்பூர்
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
முகாசா- (விருத்தாசலம் அருகே) பரூர்.
சந்திரரேகை என்னும் நூலில்;
“யோகி பரமானந்த கலியின் தோற்றம்
உண்மை நிற ஜாதிமத பேதம் மெத்த
பாகி தமாய் ஆண் மக்கள் குறைவு உண்டாகும்.

மோகித்தே முன் பின்னும் முறைமை கெட்ட
மூதறிய தாயினையே சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில்
பூவுலகிற் கலியுனுட பான்மை கேளே.’’

கலியின் பிடியில் சிக்கி எப்படியெல்லாம் துன்பம் படுவோம் என விளக்குகின்றார். 5000 ஆண்டுகளுக்குப் பின் பூமி சுழற்சியில் நல்ல மக்கள், தர்ம நெறியில் சிறந்த பண்பாளர்கள் பிறப்பார்கள் என்று சந்திரரேகையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கோரக்கர் குகைகள்

கொல்லிமலை குகை, சதுரகிரி குகை ஆகியவற்றில் அமர்ந்து நீண்ட காலம் தவம் செய்திருக்கிறார். இக்குகைக்கு சென்று நாம் வணங்கி, முடிந்தால் தியானம் செய்தோம் என்றால் அவரின்
அருளாசியைப் பெறலாம்.

கோரக்கரின் மூல மந்திரம்

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீகோரக்கர் சித்தர் சுவாமியே போற்றி’’மகரிஷிகள், சித்தர்கள் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்வதற்காக வாழ்ந்தவர்கள். ஜீவசமாதி ஆனாலும் அருவுருவமாக இருந்து மக்களுக்கு அருள் புரியும் தன்மையைப் பெற்றவர்கள். ஜீவசமாதியான சித்தர்களைத் தேடி நாம் சென்று அவர்களை வணங்கினோம் என்றால், நம்முடைய துன்பங்கள் நீங்கி நல்லருள் பெறுவோம்.

பொன்முகரியன்

The post கோரக்கர் தோற்றுவித்த மூலிகைகள் appeared first on Dinakaran.

Related Stories: