நம்பிக்கையை தரும் தும்பிக்கை கணபதி

உப்புப் பிள்ளையார்

விபூதியைக் கொண்டு விநாயகர் பிடித்து வணங்கினால், உடலில் நோய்கள் நீங்கும். வேலையில் பதவி உயர்வுகள் கிட்டும். புற்று மண்ணைக் கொண்டு பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்து வந்தோமெனில், நம் தொழிலில் லாபம் பெருகும். அத்துடன், ஆரோக்கியம் உண்டாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி லாபம் கிட்டும். சந்தனத்தைக் கொண்டு பிள்ளையார் செய்து வழிபட்டு வந்தால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். வெல்லத்தில் செய்து வைக்கும் பிள்ளையாரை வழிபட்டு வந்தால், எல்லாவித செளபாக்கியமும் கிட்டும். மிகக் குறிப்பாக, நம் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வரச் செய்வார். உப்பு வைத்து பிள்ளையார் செய்து வழிபட்டு வந்தால், எப்பேர்பட்ட எதிரியின் தொல்லையும் விட்டொழியும். வேப்ப மரத்தில் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபடுவதாலும் இத்தகைய பலன்கள் கிட்டும்.

வெள்ளெருக்கு பிள்ளையார்

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்துச் செய்து வழிபட்டு வந்தால், தோஷங்கள் அனைத்தும் அகலும் என்றும், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்றும் ஞான நூல்கள் சொல்கின்றன. வெள்ளெருக்கில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கும் பட்சத்தில் நம்மிடம் தீய சக்தி ஏதும் அண்டாமல், நல்ல சிந்தனைகள் மேலோங்கி, சொத்துகள் பெருகுவது நிச்சயம். உங்களை வாட்டி வதைக்கும் நோய்களும், கடன்களும் தீர்ந்து உடலும் உள்ளமும் நலம் பெற வாழவேண்டுமெனில், வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டு வாருங்கள். இதையெல்லாம் விட எளிமையானது பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜிப்பது. இப்படி பூஜித்தால் எண்ணியது நிறைவேறுவது நிச்சயம். அத்துடன், நோய்களை நீக்கி ஆரோக்கியத்துடன் வாழச் செய்வார் ‘பசுஞ்சாண பிள்ளையார்’. குறிப்பாக, சித்திரா பௌர்ணமி அன்று இந்தப் பிள்ளையாரை வழிபடுவது நற்பலனைத் தரும். பச்சரிசி மாவினால் பிடித்துச் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயிகளின் விளைச்சல் பெருகுவது நிச்சயம்.

பிள்ளையாருக்கு நிவேதனங்கள்

பிள்ளையாருக்கு என்னென்ன நிவேதனங்கள் படைக்க வேண்டும் என்பது முக்கியம். எத்தனை நிவேதனங்கள் படைத்தாலும் அன்று மோதகம் எனப்படுகின்ற கொழுக் கொட்டையைக் கட்டாயம் படைக்க வேண்டும். இது தவிர என்ன படைக்க வேண்டும் என்பதை முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அவ்வையார் ‘‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்’’ என்று பால், தேன், வெல்லப்பாகு, பருப்பு, இவைகளைக் கலந்து தருவதாக சொல்கிறார். இந்தக் கலவையானது மோதகம் என்று தெரிகிறது. அதைப்போலவே அருணகிரி நாதரும் தம்முடைய திருப்புகழ் பாடலில் விநாயகருக்கு படைக்க வேண்டியவை பட்டியல் இடுகின்றார். ‘‘கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி’’ என்ற பாடலில், அவருக்கு வைக்க வேண்டிய அப்பம், அவல், பொரிகடலை, கனி வகைகள் என்று பட்டியலிடுகிறார்.

ஆதி விநாயகர்

விநாயகரில், ஆதி விநாயகர் என்றொரு விநாயகர் வடிவம் உண்டு. அதென்ன ஆதி விநாயகர்? திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகே உள்ளது தில தர்ப்பணபுரி என்று அழைக்கப்படும் தலத்தில் புகழ்பெற்ற முக்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பனாதிகளை இங்கே செய்யலாம். இந்த ஆலயத்தில் தனிச்சந்நதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனிதமுக விநாயகர் தரிசனம் தருகிறார். இங்கு நரமுக விநாயகர் மனித உருவத்தோடு பாசம், அங்குசம், அபயஹஸ்தமாக ஆனந்த முத்திரையுடன் கூடிய கைகளோடு, இடதுகையை இடது காலின்மீது வைத்தபடி காட்சி அளிக்கிறார். இவரை ஆதி விநாயகர் என்றும் நரமுக விநாயகர் என்றும் அழைக்கிறார்கள் இத்தலத்தில் கணபதி நர முகமும் ஜடாமுடியுமாக அழகிய ஒரு இளையனாக தவக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பிலும் சிறப்பு.

நவகிரகங்களும் விநாயகரும்

‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். நாயகன் என்றால் தலைவன் விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோயில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லை என்பது பொருளாகும். விநாயகரின் உடம்பில் நவகிரகங்களும் அடங்கியுள்ளன விநாயகரின் தலையில் குரு பகவானும், நெற்றியில் சூரியன், வலது மேல் கையில் சனியும், இடது மேல் கையில் ராகு, வலது கீழ் கையில் புதன் அமர்ந்துள்ளனர். நாபிக்கமலத்தில் சந்திரன், வலது தொடையில் செவ்வாய், இடது தொடையில் கேது என நவகிரகங்கள் வீற்றிருக்கின்றனர். ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையாரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும்.

ஜெயசெல்வி

The post நம்பிக்கையை தரும் தும்பிக்கை கணபதி appeared first on Dinakaran.

Related Stories: