கும்பராசிப் பணியாள் அடுத்தவருக்கு உழைக்க பிறந்தவர்கள்

கும்ப ராசிக்காரர்கள் எந்த வேலை செய்தாலும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். முதலாளிக்கு விசுவாசமாக வேலை செய்வதைவிட தாங்கள் செய்யும் வேலைக்கு அதிக விசுவாசமாக இருப்பார்கள். கருமமே கண்ணாயினார் என்ற அவ்வையாரின் வாக்குக்கு ஏற்பச் செய்யும் தொழிலே தெய்வம். அதில் திறமைதான் நமது செல்வம் என்ற தாரக மந்திரத்தை வாழ்க்கையில் பின்பற்றுவார்கள். கடுமையாக உழைக்கும் கும்ப ராசியினர் அதற்கு ஏற்ற ஊதியத்தையோ புகழையும் எதிர்பார்ப்பதில்லை. அந்த வேலையை நிறைவாகச் செய்தோம் என்ற மனதிருப்திதான் இவர்களின் எதிர்பார்ப்பாகும்.

வேலைகள்

கும்ப ராசிக்காரர்கள் ஒரு நிறுவனத்தைத் தன் தோளில் சுமக்கக் கூடிய ஆற்றலும் திறமையும் கொண்டவர்கள். முதலாளிக்கு நெருக்கமான செயலாளர், மேலாளர், நிர்வாகி போன்ற பணிகள் இவர்களுக்கு மிகவும் ஏற்றவை. சிலர் விஞ்ஞானிகள் பொறியியலாளர் ஆராய்ச்சியாளர் போன்ற வேலைகளும் செய்வதுண்டு. இவர்களுக்கு கவனக்குறைவு இருக்காது. எனவே கணக்காயர் ஆடிட்டர் போன்ற வேலைகளிலும் திறம்பட செயல்படுவார்கள். வங்கிப் பொறுப்புகளுக்கு ஏற்றவர்கள்.

குடும்பம் வேலையும்

கும்ப ராசியினர் குடும்பத்தின்மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள். தங்கள் குடும்பத்திற்கு நேரம் செலவழிக்கவும் விரும்புவார்கள். அதே வேலையில் வேலைத்தளத்திலும் எவ்வித குறையும் இன்றி முழுமையாக தன்னுடைய வேலைகளைச் செய்து தர வேண்டும் என்றும் நினைப்பார்கள். குடும்பம் வேலை என் இரண்டையும் அழகாக பாலன்ஸ் செய்வார்கள்.

வேலை மாற்றம்

கும்ப ராசிக்காரர்கள் எவ்வளவு கடுமையாக நேர்மையாக உழைத்தாலும் திடீரென்று ஒரு நிறுவனத்தை விட்டு மறு நிறுவனத்திற்கு மாறிவிடுவர். அந்த மாற்றத்தை இவர்கள் விரும்பி ஏற்றுக் கொள்வார்கள். முதல் நிறுவனத்தின் அச்சாணியாக இருந்த இவர்கள் ‘சட்’ என்று அதை உதறித் தள்ளிவிட்டு இன்னொரு நிறுவனத்தில்போய் முக்கியப் பொறுப்பில் இருந்து கொள்வார்கள். நாம் விட்டுவிட்டு வந்த பழைய நிறுவனம் என்ன ஆகும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்காது. அடுத்த நிறுவனத்தின் மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்திற்கும் மாடாக உழைத்து ஓடாக தேய்ந்து போவார்கள். இவர்களுக்கு வேலைதான் பிரதானமே தவிர முதலாளியோ நிறுவனமோ சக பணியாளர்களோ ஊரோ பிரதானமில்லை. அவை எதுவும் முக்கியமில்லை.

ஆராய்ச்சி திலகம் (analist)

கும்ப ராசியினருக்கு பகுப்பாய்வு (analysis) திட்டமிடுதல் (planning) சிக்கல்களை தீர்த்து வைத்தல் மத்தியஸ்தம் செய்தல் அல்லது சமரசம் செய்தல் போன்றவை மிகவும் திறமையாக சிறப்பாக செய்யக்கூடிய பணிகள் ஆகும். எனவே இவர்கள் கையில் டேட்டாவை (data) கொடுத்துவிட்டால் இவர்கள் அவற்றைக் கொண்டு எல்லா வகையிலும் பகுப்பாய்வு செய்து சரியான முடிவுகளை அளிப்பார்கள். எதையும் லாஜிக்காக சிந்தித்து காரண காரியத் தொடர்போடு அலசி ஆராய்ந்து சிறப்பான
ஆலோசனைகளை வழங்குவார்கள்.

பணமா? பாராட்டா?

கும்ப ராசிக்காரர் பணவரவில் கறார் பேர்வழி என்றாலும் கூட சம்பளத்துக்காக வேலை செய்பவர் கிடையாது. இவர் வேலையில் யாரும் தொந்தரவு செய்யாமல் இவர் போக்குக்கு இவரை வேலை செய்ய விட்டால் போதும். இவர் சம்பளத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். குறைந்த சம்பள உயர்வு கிடைத்தாலும் கூட வேலையில் நிம்மதி இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து வேலை செய்வார். ஆனால் இவர் வேலையில் குறை கூறினாலும் அல்லது மற்றவர்களை வேலை வாங்குவதில் பாரபட்சம் காட்டுகிறார் என்று ஏதேனும் குற்றச்சாட்டு இவர் மீது வந்தாலும் வேலையை விட்டுவிடுவார். முதலாளியுடன் பயங்கரமாக சண்டை போட்டு எல்லா நியாய அநியாயங்களையும் மணிக்கணக்கில் எடுத்துரைத்து பின்பு வேலையை விட்டுப் போவார். அதுவரை இவர் அப்படி பேசி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அன்று அவர் தன்னுடைய நேர்மையை நிரூபித்து விட்டுத்தான் அந்த இடத்தை விட்டு வெளியேறுவார்.

வளர்ச்சிக்கு உதவுவார்

கும்ப ராசிக்காரருக்கு தான் செய்யும் வேலையில் சலிப்பு தட்டி விட்டால் நல்ல சம்பளம் கொடுக்கிறார்களே என்று அங்கேயே ‘நாற்காலியைத் தேய்த்துகொண்டு’ இருக்க மாட்டார். தனக்கு சவாலாக இருக்கும் வேறு ஒரு வேலையை தேடிக்கொண்டு போய்விடுவார். இதனால் இவர் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக் காலத்தில் கூட இருப்பார். வளர்ந்த பிறகுதான் தேவை இல்லை என்று விலகி விடுவார். நிறுவனத்தின் கஷ்ட காலத்தில் உடன் இருக்கும் இவரை எவரும் மறக்க இயலாது. நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெரிதாக தன் மனதில் வைத்துக்கொண்டு தன்னால்தான் அந்த நிறுவனம் முன்னுக்கு வந்தது என்று பெருமை பேசமாட்டார். ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற திருநாவுக்கரசரின் வாக்கின்படி இன்னொரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்.

சிக்கன சிகாமணி

கும்ப ராசிக்காரர் சிக்கனமானவர். பண விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பார். நிறுவனத்தின் பணத்தை யாரும் ஒரு ரூபாய் கூட அனாவசியமாக எடுத்துச் செலவு செய்வதை அனுமதிக்க மாட்டார். ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்ற கொள்கை உடையவர். பொதுப்பணம் தானே அல்லது இன்னொருவர் பணம் தானே என்று இவரும் தாராளமாக எடுத்துக் கொள்ள மாட்டார். மற்றவரையும் தாராளமாக செலவு செய்ய விட மாட்டார். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்குக் கேட்டு உயிரை எடுத்து விடுவார். இதனால் இவர் மீது பணியாளர்களுக்கு அதிருப்தி இருந்தாலும் கூட இவருடைய நேர்மையும் கடும் உழைப்பும் பண்பும் பரிவும் இவரை மறக்க இயலாத மாமனிதராக மனதில் நிறுத்தும்.

அன்பும் பண்பும்

கும்ப ராசிக்காரர் சக பணியாளர்களிடம் அன்பாகவும் பண்பாகவும் மரியாதையாகவும் பழகுவார். இவர்கள் இணைந்தோ தனித்தோ செய்ய வேண்டிய வேலையைப் பற்றி அதனுடைய முக்கியத்துவம் அதை முடிக்க வேண்டிய நேரம் அதன் அவசியம் பற்றி மட்டும் பேசுவாரே தவிர வேறு அனாவசியமான வார்த்தைகளைப் பேச மாட்டார்.

நிர்வாகத் திறன்

கும்ப ராசி நிர்வாகி தனக்கு அடுத்து ஒரு நல்ல உதவியாளரைப் பணியாளர்களிடம் பேசுவதற்காக நியமித்திருப்பார். இவர் கடுமையாகப் பேச வேண்டிய சூழ்நிலையில் தன் உதவியாளரை விட்டு பேசச் செய்வாரே தவிர இவர் பேசமாட்டார். ‘பேச்சைக் குறைப்பீர், பெருக்குவீர் உழைப்பை’ என்பதுதான் இவருடைய பணியிடக் குறிக்கோள்.

நட்பும் உறவும்

கும்ப ராசிக்காரர் சக பணியாட் களின் அந்தரங்க விஷயத்தில் தலையிட மாட்டார். மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர் எதுவும் விமர்சிக்க மாட்டார். அவர்களாகச் சொன்னால் சுருக்கமாகவும் தெளிவாகவும் மட்டும்தான் பேசுவாரே தவிர உட்கார வைத்து அவர்களின் குடும்பக் கதையை கன்னத்தில் கைவைத்து கேட்டுக் கொண்டே இருக்க மாட்டார். இருவரின் வேலையும் கெட்டு விடும் அல்லவா. மறுநாள், அடுத்தநாள் என்று அவர்கள் வீட்டு கதையை அப்புறம் என்னாயிற்று போனவர்கள் வந்தார்களா வந்தவர்கள் சென்றார்களா என்று ரன்னிங் கமெண்ட்ரி போல் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்.

முனைவர் செ.ராஜேஸ்வரி

 

 

The post கும்பராசிப் பணியாள் அடுத்தவருக்கு உழைக்க பிறந்தவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: