ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஏ பிளஸ் பிரபல ரவுடி படப்பை குணா (எ) குணசேகரன் (44). இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் 8 கொலை வழக்குகள், 11 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சிபுரம் மவட்டத்தில் ரவுடிகளை ஒடுக்க கடந்த ஓராண்டிற்கு முன்பு வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதனால் ரவுடி குணா தலைமறைவாக இருந்தார். காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்த படப்பை குணா ஜாமீனில் வெளியே வந்தார்.
அப்போது, பாஜ கட்சியில் இணைந்த குணாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கு படப்பை குணா கொலை மிரட்டல் விடுத்து தாக்கி உள்ளார். இதுகுறித்து, சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். போலீசார் குணா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், குணா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவர் 5வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post குண்டர் தடுப்பு சட்டத்தில் பிரபல ரவுடி படப்பை குணா 5வதுமுறை சிறையில் அடைப்பு: கலெக்டர் அதிரடி appeared first on Dinakaran.