தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு

* சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் 1.4.2025 முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்கள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும்.
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க அடுத்து வரும் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படும். இத்திட்டத்தின் கீழ்
20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். இத்திட்டத்திற்கான மானிய நிதியுதவிக்கென ரூ.225 கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்படும்.

* புதுமைப்பெண் திட்டத்துக்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், தற்போது நான்கு லட்சத்து ஆறாயிரம் மாணவியர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின். உயர்கல்வியில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை சென்ற கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்து, கூடுதலாக 40.276 மாணவியர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். வரும் நிதியாண்டில் இத்திட்டத்தினைச் செயல்படுத்திட ரூ. 420 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 36 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் தொடங்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டம் தற்போது 476 லட்சம் மகளிர் திட்ட சுயஉதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. சுயஉதவிக் குழு இயக்கத்தில் இதுவரை இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு, 10,000 புதிய சுயஉதவிக் குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும். மேலும், வரும் நிதியாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி அளவிற்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* 2025-26ம் ஆண்டுக்கான வருவாய் வரவினங்கள் 3,31,569 கோடி ரூபாயாக அரசு மதிப்பீடு செய்துள்ளது. மொத்த வருவாய் வரவினங்களில் 75.3 சதவீதம் மாநிலத்தின் சொந்த வருவாயாகும். மீதமுள்ள 24.7 சதவீதம் ஒன்றிய வரிகளில் பங்கு மற்றும் ஒன்றிய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ஆகும்.
வருவாயினங்கள் வருவாய் (கோடியில்)
மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,20,895
மாநிலத்தின் சொந்த வரி
அல்லாத வருவாய் ரூ.28,818
ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ.23,834
மத்திய வரிகளில் பங்கு ரூ.58,022
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்: அரசின் சொந்த வரி வருவாய் 2025-26ம் ஆண்டில் 14.6 சதவீதம் உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் முக்கிய கூறுகள் பின்வருமாறு:
கூறுகள் வருவாய் அளவு
(சதவீதத்தில்)
வணிக வரிகள் 74.2
முத்திரைத் தாள்களும்
பத்திரப் பதிவுகளும் 11.8
மாநில ஆயத்தீர்வை 5.9
வாகனங்கள் மீது வரிகள் 6.1
மற்றவை 2

* ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,924 கோடி
ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர ‘அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டு திட்டம்’ செயல்படுத்தப்பட்டுகிறது இந்த திட்டத்தில் 120 கிராம அறிவுசார் மையங்கள் ரூ.117 கோடி மதிப்பீட்டில் கட்டுப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்கு 2025-26 நிதியாண்டில் ரூ.280 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின்’ கீழ் 2025-26ம் நிதியாண்டில் ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தமிழ்நாட்டில் 37 வகை தொல்குடியினா் தனிச்சிறப்பு மிக்க அடையாளத்துடன் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், சமவெளி பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டிற்காக ஆண்டொன்றிற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ‘தொல்குடித் திட்டம்’ உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குவதற்காக இந்த வரவு செலவு திட்டத்தில் ரூ.733 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் அதிதிராவிட மாற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு ரூ.3,924 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* உலக தமிழ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு
தமிழ் செம்மொழி மற்றும் தமிழ் பண்பாட்டின் சிறப்பினை உலக தமிழ் இளைஞர்களிண் பரவச்செய்ய தமிழ்நாடு மட்டுமல்லாமல் இதர இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் உலக தமிழ் மையங்களில் பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கணினி தேர்வு முறையில் ‘ உலக தமிழ் ஒலிம்பியாட்’ போட்டி இனி ஆண்டுதோறும் நடத்தப்படும். உலக அளவிலான வெற்றியாளர்கள் மட்டுமல்லாமல் மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கான மொத்த பரிசு ரூ.1 கோடி வழங்கப்படும். தமிழ் செம்மொழியின் தொன்மையை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வதற்காக அகரம்-மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலக தமிழ்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.

The post தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கினால் 1% பதிவுக் கட்டணம் குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories: