எட்டயபுரம் : எட்டயபுரம் மார்க்கமாக நெல்லை, தூத்துக்குடி, மதுரை, ராமேஸ்வரம், விளாத்திகுளம், சென்னை, ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பஸ் நிலையத்தை பயன்படுத்தி செய்கின்றனர்.
இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் பல இடங்களில் கான்கிரீட் சிமென்ட் பூச்சுகளில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. குறிப்பாக பஸ் நிலையத்தின் உள்ளே செல்லும் முகப்பு பகுதி மற்றும் வணிக வளாக முன்பக்க பகுதியில் உள்ள மேற்கூரை கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகள், அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகின்றன. இதனால் எந்நேரம் தங்கள் மீது விழுமோ என்ற அச்சத்துடனே பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
எட்டயபுரம் பஸ் நிலையம், கடந்த 1992ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள வணிக வளாகங்களில் உள்ள மேற்கூரையை வாடகைதாரர்களே அவர்கள் பாதுகாப்பை கருதி சரி செய்துள்ளனர். ஆனால் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் இதுவரை பராமரிப்பு பணி செய்யாததால் பல இடங்களில் உள்ள மேற்கூரை பகுதி எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது.
இதுவரை கான்கிரீட் பூச்சுகள் விழும்போது எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. எனவே பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் இடிந்து விழும் நிலையில் உள்ள மேற்கூரை பகுதியில் உள்ள கான்கிரீட் சிமெண்ட் பூச்சை அகற்றி செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post எட்டயபுரம் பஸ் நிலையத்தில் இடிந்து விழும் கான்கிரீட் பூச்சுகள் appeared first on Dinakaran.